Sunday, March 25, 2018


பந்தியில் வாழை இலை போட்டுச் சாப்பிடும் போது இலையைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன்?

By RKV | Published on : 24th March 2018 11:56 AM |

பந்தியில் அமர்ந்து சாப்பிடும் போது கண்டிருப்பீர்கள், இப்போதும் கூட பலரும் ஒரு கை நீரள்ளி இலையைச் சுற்றியும், இலைக்கு உள்ளேயும் தெளித்து இலையைச் சுத்தம் செய்த பிறகே உணவுப் பொருட்களை பரிமாற அனுமதித்துப் பிறகு சாப்பிடத் தொடங்குகிறார்கள். இலைக்கு உள்ளே நீர் தெளிப்பதை வேண்டுமானால் இலையைக் கழுவுவதற்காக நீர் தெளிக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்ளலாம். இலைக்கு வெளியேயும் ஏன் நீர் தெளிக்க வேண்டும்? என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

சிம்பிள்... இந்தப் பழக்கத்தைத் தொடங்கியவர்கள் நமது ஆதி ரிஷிகளும், முனிவர்களும் தான். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் காட்டுக்குள், கட்டாந்தரையில் இலை போட்டுத்தான் சாப்பிட வேண்டியதாக இருந்திருக்கும். அப்போது உணவு பரிமாறப்பட்டிருக்கும் இலையைச் சுற்றி தூசு எழும்பிப் பறக்காமல் இருப்பதற்காக இலையைச் சுற்றி தண்ணீர் தெளிக்கும் பழக்கம் வந்திருக்கலாம். சரி அப்போது அப்படிச் செய்வதில் அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், இன்று கான்கிரீட் கட்டிடங்களில் வசித்துக் கொண்டிருக்கும் நாம் ஏன் அந்தப் பழக்கத்தை இன்னும் விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? அதற்கும் சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிலர் சொல்கிறார்கள் இந்திய உணவுகளில் பொதுவாகவே காரமும், மணமும், அமிலத்தன்மையும் அதிகமிருக்கக் கூடும். அப்படியான தன்மைகளைக் குறைத்து அமில, காரத்தன்மையை சமநிலைப்படுத்துவதற்காகக் கூட இப்படி ஒரு பழக்கம் தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். இலைக்கு உள்ளும், புறமும் ஒரு கை நீரள்ளித் தெளிப்பதால் உணவுப் பொருட்களின் காரம் மற்றும் அமிலத்தன்மை நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது என்கிறார்கள். இது ஒரு விதமான விளக்கம்.

இன்னொரு சாரர் என்ன சொல்கிறார்கள் எனில், இந்திய உணவுகளில் பெரும்பகுதி அரிசியும், ஸ்டார்ச்சும் (மாவுப்பொருள்) நிறைந்தவையாகவே இருக்கும். ஆகவே இலையில் பரிமாறப்பட்டுள்ள உணவைச் சுற்றி ஒரு கை நீரள்ளித் தெளித்த பின் உண்பதால் உணவிலுள்ள மாவுச்சத்து கரைந்து உணவு எளிதில் ஜீரணமாகக் கூடிய வகையில் மாறும் என்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களுமே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படாதவையே! தொன்று தொட்டுச் செய்து வரும் ஒரு பழக்கத்திற்கான காரணங்களாக இவை இருக்கலாம் என மனிதர்கள் தாங்களே கற்பிதம் செய்து கொள்ளும் காரணங்களே இவை. இப்படியுமிருக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதே தவிர உண்மையில் உணவைச் சுற்றி தண்ணீர் தெளிப்பதன் பின்னிருக்கும் ரகஷியம் அறியப்படாததாகவே இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் இப்படிச் செய்வதை சித்ராகுதி (chitrahuti) என்கிறார்கள். பிராமணர்களில் பெரும்பாலானோர் இன்றும் உணவுண்பதற்கு முன்பு இந்தப் பழக்கத்தைத் தவறாது கடைபிடித்து வருகின்றனர். அவர்களளவில் இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, நமக்கு உணவளித்த தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை அவர்கள் தங்களது உணவு நேரத்தின் போது பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

சிலரோ, இலையில் உணவுண்ணும் பழக்கம் இருந்த அக்காலத்தில், இலையில் பரிமாறப்பட்டு உணவைச் சுற்றி எறும்புகள், வண்டுகள் உள்ளிட்ட சிறுபூச்சிகள் அணுகாவண்ணம் தடுப்பதற்காக இலையைச் சுற்றி நீர் தெளிக்கும் பழக்கம் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

மேற்கண்ட காரணங்களில் எது வேண்டுமானாலும் நிஜமாக இருக்கலாம். ஆனால், இனிமேல் சாப்பிடும் போது இலையைச் சுற்று ஏன் தண்ணீர் தெளிக்கிறார்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் இனி தலையைச் சொறிந்து கொண்டு அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று சொல்லாமல் இந்தக் காரணங்களில் எதையாவது ஒன்றைச் சொல்லி வைக்கலாம் சரி தானே?!

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024