Sunday, March 25, 2018

மீண்டும் புத்துணர்வு பெற்ற சேலம் விமான நிலையம்: 7 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை

By DIN | Published on : 25th March 2018 12:41 AM

சேலம்: சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது முதல் இரண்டு தடவை விமான சேவை தொடங்கி, போதிய வருவாய் இல்லாத காரணங்களால் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. அதேவேளையில், 2011-க்குப் பிறகு தற்போது மீண்டும் சேலம் விமான நிலையம் புத்துணர்வு பெற்று, 7 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை மீண்டும் துவக்கப்பட்டிருப்பது சேலம் மக்களிடையே பெரியதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் கடந்த 1993 இல் சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசின் விமான நிலைய ஆணையக் குழுமம் மூலம் விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இதில், என்.இ.பி.சி. ஏர்லைன்ஸ் மூலம் விமான சேவை இயக்கப்பட்டது. ஆனால், போதிய வருவாய் இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் மூலம் சேலம் - சென்னை மார்க்கத்தில் 2009 முதல் 2011 வரை விமான சேவை இயக்கப்பட்டது. போதிய பயணிகள் இல்லாதது, வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2011 இல் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் 2011 முதல் தற்போது வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
சேலத்தில் உள்ள தொழிலதிபர்களுக்கு சொந்தமான மூன்று விமானங்கள், ஜே.எஸ்.டபிள்யு. நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம் விமான நிலையத்தில் ஓடுதளம் 6000 அடி உள்ளது. பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுதளத்தை விரிவுபடுத்தவும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக மேலும் சுமார் 570 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தற்போது 570 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அரசாணையும் வெளியாகி உள்ளது.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வருவாய்த் துறை ஏற்கெனவே நில அளவீடு பணிகளைச் செய்து முடித்துள்ளது. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நில எடுப்புக்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், தொழில் ரீதியாக வெளியூர் செல்பவர்கள் பெங்களூரு, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக இந்த இடங்களை சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் விரைவுச் சாலைகளில் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பெரும்பாலானோர் மேற்கண்ட இடங்களுக்கு கார்களில் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்று விடுகின்றனர். ஒரு பக்கம் பயண நேரம் மணிக்கணக்கில் விரயம் ஏற்படுகிறது.

விமான இயக்கத்தைப் பொருத்தவரையில், சேலத்துக்கு போதிய சாதகமான அம்சங்கள் இருந்தாலும், மறுபக்கம் குறுகிய தூரத்தில் அமைந்துள்ள நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாதகமாக இருந்து வந்தன.
இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தேசிய விமான போக்குவரத்துக் கொள்கைக்கு
கடந்த ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையின்படி, 1 மணி நேரத்துக்குள் பயண இலக்கை அடையும் குறைந்த தொலைவு விமானங்களில் பயணிகள் கட்டணமாக ரூ.2,500 மட்டுமே விமான நிலையங்கள் வசூலிக்க முடியும்.

விமானப் போக்குவரத்து அல்லாத வழித்தடங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்கள் புதிய விமானப் போக்குவரத்து கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

எனவே, மத்திய அரசின் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையால், சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை மேற்கொள்ள சாதகமான சூழல் உருவாகி இருந்தது. பல்வேறு கட்டத் தடைகளுக்குப் பிறகு தற்போது மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால் ட்ரூஜெட் விமான நிறுவனம் சென்னை - சேலம், சேலம்-சென்னை வழித்தடத்தில் விமான சேவையை இயக்க முன்வந்துள்ளது. கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) முதல் மீண்டும் சேலம் விமான நிலையம் இயங்க உள்ளது. விமான சேவையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறார். மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்கின்றனர். மீண்டும் விமான சேவை இயங்குவதன் மூலம் சேலம் நகரத்தில் தொழில் ரீதியான வளர்ச்சி மேலும் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது இரவு நேரத்தில் விமானங்கள் வந்திறங்கவும், திருப்பதி உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கு விமானங்களை இயக்கவும், தற்போதைய விமானப் பயண நேரத்தை மாற்றிடவும் சேலத்தில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...