1+2+3+4 = 27.5!
'மாஜி' முதல்வர் லாலுவுக்கு, 'ஆயுளை' விட அதிக தண்டனை
DINAMALAR 25.03.2018
ராஞ்சி:பீஹாரில் நடந்த, கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில்,
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவுக்கு, ராஞ்சி நீதிமன்றம், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பு அளித்தது. ஊழல் வழக்குகளில் இதுவரை, லாலுவுக்கு, 27.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இதனால், தன் வாழ்நாளில் மீதமுள்ள காலத்தை, அவர், சிறையிலேயே கழிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 1980 மற்றும், 1990களில், கால்நடைத் தீவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து, ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஐந்து வழக்குகளை, சி.பி.ஐ., பதிவு செய்தது.இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கின்றன. காங்கிரசின், ஜெகன்னாத் மிஸ்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், லாலு பிரசாத், ௬௯, ஆகியோர், பீஹார் முதல்வர்களாக இருந்த போது நடந்த ஊழல்கள் இவை.
இதுவரை, தீர்ப்பு அளிக்கப்பட்ட மூன்று வழக்குகளிலும், லாலு பிரசாத் யாதவ்
குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஜெகன்னாத் மிஸ்ரா, இரு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஊழலுக்கு உடந்தை
இந்நிலையில், தும்கா கருவூலத்தில் இருந்து, 3.13 கோடி ரூபாய் எடுத்ததாக தொடரப்பட்ட நான்காவது ஊழல் வழக்கில், ராஞ்சி சிறப்புநீதிமன்ற நீதிபதி, ஷிவ்பால் சிங், சமீபத்தில் அளித்த தீர்ப்பில், 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, அறிவித்தார். ஊழலுக்கு உடந்தையாக இருந்த, மேலும், 1௮ பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட, 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று, இந்த வழக்கில், குற்றவாளி களுக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. நீதிபதி, ஷிவ்பால் சிங் அளித்த தண்டனை விபரம்:இந்திய தண்டனை சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ், லாலு பிரசாத்துக்கு, தலா, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர், ஒன்றன் பின் ஒன்றாக, மொத்தமாக, 14 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும். அத்துடன், அவருக்கு, ௬௦ லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி அறிவித்தார்.
69 வயது
இந்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப் போவதாக, லாலுவின் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.இதற்கிடையே, டோரண்டா கருவூலத்தில் இருந்து, 139கோடி ரூபாய் எடுத்த மோசடி தொடர்பான, ஐந்தாவது ஊழல் வழக்கு, தற்போது விசாரணையில் உள்ளது. லாலு பிரசாத்துக்கு, இப்போது, ௬௯ வயது ஆகிறது. ஏற்கனவே, முதல் மூன்று வழக்குகளில், அவருக்கு மொத்தம், பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நான்காவது வழக்கில், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர், 27.5 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதனால், மீதியுள்ள வாழ்நாளை, சிறையிலேயே கழிக்க வேண்டிய அவலம், லாலுவுக்கு ஏற்பட்டுள்ளது.
பதின்மூன்றரை ஆண்டுகள்!
கால்நடைத் தீவனம் தொடர்பாக, ஏற்கனவே தீர்ப்பு வெளியாகியுள்ள மூன்று வழக்குகளில், லாலுவுக்கு, பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சாய்பாசா கருவூலத்தில், 37.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட முதல் வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, எம்.பி., பதவியிலிருந்து, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தியோகர் கருவூலத்தில், 89.27 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட இரண்டாவது வழக்கில், மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சாய்பாசா கருவூலத்தில், 33.13 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்றாவது வழக்கில், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.லாலு பிரசாத் யாதவ், கடந்தாண்டு டிசம்பரிலிருந்து, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment