Sunday, March 25, 2018

ஆந்திராவில் உதாரண பல்கலைக்கழகம் அமைகிறது

Added : மார் 25, 2018 04:51 | 



  மும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், சில, 'கார்ப்பரேட்' நிறுவன அதிபர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, ஆந்திராவில், உதாரண பல்கலைக்கழகம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், இண்டஸ் இண்ட் வங்கியின் தலைவர், சேஷசாயி, மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா உட்பட பல கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் இணைந்து, கிரியா பல்கலைக்கழகம் என்ற கல்வி நிறுவனத்தை துவங்க உள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு ஆலோசகராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்று உள்ளார். இதில், கலை மற்றும் அறிவியல் இளங்கலைப் பாடப்பிரிவுகள் நான்கு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது இருக்கும் பாடதிட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும் இது, உதாரண பல்கலைக்கழகமாக திகழும் என கூறப்படுகிறது.

ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி வளாகத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், 750 கோடி ரூபாய் செலவில், இந்த பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது. வரும், 2019, ஜூலை முதல் செயல்படத் துவங்கும் இந்த பல்கலைக்கழகத்துக்கான மாணவர் சேர்க்கை, வரும் நவம்பர் மாதம் முதல் துவங்குகிறது. இங்கு பயில, தங்கும் வசதியுடன் சேர்த்து, 7 - 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிகிறது. ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024