Saturday, March 24, 2018

கொள்ளையர்களால் காதல் ஜோடிக்கு நடந்த துயரம்! காட்டில் சினிமாவை விஞ்சிய சம்பவம் 

கார்த்திக்.சி  23.03.2018  vikatan 

கடலூர் அருகே உள்ள மலைக்கோயிலில் காதல் ஜோடியைக் கொள்ளையர்கள் கொடுமைப்படுத்தினர். அவர்களின் உடைமைகளைப் பறித்த கொள்ளையர்களில் ஒருவரை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் தமிழரசன்(20). இவர், அருகிலுள்ள தொழுதூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு படித்துவருகிறார். இதே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிக்கும் மாணவி உஷா (19-பெயர் மாற்றம்). இருவரும் நகரப் பேருந்தில் கல்லூரிக்குச் சென்ற வகையில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியுள்ளனர். நாளடைவில் இவர்களின் பழக்கம், காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இருவரின் காதல் வெளியில் தெரியவந்துள்ளது.



இதையடுத்து, தங்களின் மகளைப் பாதுகாக்கும் பொருட்டு உஷாவின் குடும்பத்தார், சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள அவர்களது உறவினர் வீட்டில் கொண்டுவந்து அவரை விட்டுவிட்டு சென்றுள்ளனர். உஷாவைக் காணாத தமிழரசன், ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்து கடைசியில், வாழப்பாடியில் இருக்கும் உஷாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அங்கும் சென்றுள்ளார். ரகசியமாக தான் கொண்டுபோன ஒரு செல்போனை உஷாவிடம் கொடுத்து, அந்த செல்போன் மூலம் காதலை தொடர்ந்துள்ளார். உறவினர் வீட்டில் இருக்கும் உஷா செல்போனின் தொடர்ந்து பேசமுடியாத நிலையில், இருவரும் நேரில் சந்தித்துப்பேச முடிவு செய்தனர். அதன்படி வேப்பூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் சென்ற தமிழரசன் பேருந்து நிலையத்தில் உஷாவுக்காகக் காத்திருந்துள்ளார். ஆத்தூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவதாக உஷா சொல்லிவிட்டு வாழப்பாடியிலிருந்து ஆத்தூருக்கு வந்து தமிழரசனை சந்தித்துள்ளார். பின்னர், இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் மறைவிடத்தில் சந்தித்துப் பேசி வந்துள்ளது தொடர்ந்துள்ளது.

கடந்த 14-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு வழக்கம்போல வாழப்பாடியில் இருக்கும் உறவினர்களுக்குத் தெரியாமல் உஷா, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழரசனை சந்தித்துள்ளார். இருவரும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அருகிலுள்ள வடசென்னிமலை முருகன் கோயில் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். மலைமேலுள்ள கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த பாதையோரத்தில் இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஆத்தூரைச் சேர்ந்த வழிப்பறி திருடர்களான கார்த்தி (23), மாரிமுத்து (25) ஆகியோர் வடசென்னிமலை கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறிக்கும் நோக்கில் அங்கே சென்றுள்ளனர்.

காதலர்கள் இருவரும் உட்கார்ந்திருக்கும் காட்சிகளை தன் செல்போனில் படம் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள கார்த்தி, அவர்களை மிரட்டி தமிழரசன் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டுள்ளார். பின்னர், தமிழரசனிடம் இருந்த அறுநூறு ரூபாய் பணத்தையும், பிடுங்கிக்கொண்டு இருவரையும் புதர்கள் அடர்ந்த பகுதிக்கு மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே வைத்து தமிழரசனின் பேன்ட் மற்றும் சட்டையைக் கழற்றி வாங்கிய கார்த்தி, அதை தன்னுடைய காலுக்குக் கீழே வைத்துக்கொண்டு, உஷாவின் கழுத்தில் இருந்த செயினை கொடுக்கச் சொல்லி மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர், உஷாவின் துப்பட்டாவை பிடுங்கிய கார்த்தி, உடையைக் கழற்றும்படி மிரட்டியுள்ளார். கழற்ற முடியாது என்று உஷா சொன்னதால், அவரது உடையைக் கழற்ற மாரிமுத்து சென்றுள்ளார். ``அண்ணா வேண்டாம் வேண்டாம் என்று உஷா கதறியுள்ளார். அப்போது, தனது பக்கத்தில் வந்த கார்த்திக் கையில் வைத்திருந்த கத்தியைப் பிடுங்கிய தமிழரசன், கார்த்தியின் தொடையில் சரமாரியாக குத்தியுள்ளார். நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார் கார்த்திக். உடலிலிருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மாரிமுத்து, கார்த்தியின் தொடையைத் துப்பட்டாவால் கட்டுப்போட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நிலையில், தமிழரசன் உஷாவுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று, மலை அடிவாரத்தில் உள்ள வீடுகளில் இருந்த பெண்களிடம் சென்று தங்களுக்கு நடந்த கொடுமையை எடுத்துச்சொல்லியுள்ளனர். அங்கிருந்து கோயில் நிர்வாக அலுவலகத்துக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பக்கத்தில் இருந்த கடைக்காரர்களிடம், "திருடன் ஒருவனை குத்திவிட்டு தப்பி வந்துவிட்டோம்" என்று இருவரும் கூறிவிட்டு வாழப்பாடிக்குச் சென்றுள்ளனர்.

இதனிடையே, ஆபத்தான நிலையில் இருந்த கார்த்தி, “இனி நான் தப்பிக்க வாய்ப்பில்லை. நீ இங்கிருந்து தப்பிப்போய்விடு. பேன்ட் சட்டையில்லாமல் போனவன் சொல்வதை கேட்டுவிட்டு மலைக்குக் கீழே இருந்து பொதுமக்கள் மேலே வந்தால் உன்னையும் அடித்து கொன்று போடுவார்கள்" என்று சொல்லி மாரிமுத்துவை அங்கிருந்து அனுப்பியுள்ளார். கீழே விழுந்த நிலையிலேயே, ஒரு காலை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் இருந்து சாலைக்கு வந்த கார்த்தி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து அங்கு சென்ற தலைவாசல் போலீஸார் மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி பொன்.கார்த்திக்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறந்து போனவர் வழிப்பறி கொள்ளையர் என்றும் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் தெரியவந்தது. தப்பியோடிய மாரிமுத்துவை கைது செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுநாள், கொள்ளையர் கார்த்தி கொல்லப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து, தமிழரசன், தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளர் குமாரவேல் பாண்டியனிடம் சரணடைந்து நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், உயிரிழந்த கார்த்தி மற்றும் தப்பிச் சென்ற மாரிமுத்து இருவர் மீதும் வழிப்பறி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024