Tuesday, January 8, 2019


மாநில செய்திகள்
 
இன்று முதல் 2 நாட்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா?



இன்று முதல் 2 நாட்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

பதிவு: ஜனவரி 08, 2019 05:30 AM

சென்னை,

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதாவது, “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய-மாநில பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும்” என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க போவதாக தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. மேலும், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்கள் என தெரிகிறது.

பஸ்கள் ஓடுமா?

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் பங்கேற்க இருப்பதாக உறுதியளித்துள்ளன.

2 நாள் போராட்டத்தால் வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இதனால் அரசு பஸ் போக்குவரத்திலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ‘பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது’ என்று தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், 2 நாள் பொது வேலை நிறுத்தம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குனர் (வினியோகம்) அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊழியர்களுக்கு லீவு கிடையாது

அனைத்து கிளை மின் நிலையங்கள், வினியோக அலுவலகங்கள், ஸ்டோர்கள், வாகனங்கள், பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த வேலைநிறுத்த காலம் முழுவதிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க அனைத்து தலைமை என்ஜினீயர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து அதிகாரிகளும் வேலை நிறுத்த காலம் முழுவதிலும், அதாவது இன்று காலை 6 மணி முதல் 10-ந் தேதி காலை 6 மணி வரை தங்கள் மின் நிலையங்கள், அலுவலகங்களில் தயாராக இருக்க வேண்டும்.

வேலைநிறுத்த காலம் முழுவதிலும் தடையில்லாமல் மின் சப்ளை வழங்குவதை உறுதி செய்ய, ஏதாவது மின் தடங்களோ, ‘பியூஸ்’ ஏற்பட்டாலோ, உடனடியாக அதை சரிசெய்ய தேவையான ஊழியர்களும், பொருட்களும் தயாராக இருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால், இதுபோன்ற மின் தடைகளை சரிசெய்ய வழக்கமான ஊழியர்களுடன் வெளியில் இருந்தும் ஆட்களை பயன்படுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான உணவு மற்றும் டீ, காபி போன்றவற்றை வழங்க வேண்டும். தேவையான சாதனங்களும், வாகனங்களும் எந்தவித அவசர நிலையையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இந்த 2 நாட்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக விரும்பத்தகாத செயல் நடந்தால் தலைமை என்ஜினீயருக்கு தெரிவிக்க வேண்டும். இதுபோல் கட்டண வசூலும், வங்கியில் போய் அதை செலுத்துவதும் தடையில்லாமல் நடைபெற வேண்டும். இந்த 2 நாள் வேலை நிறுத்த காலங்களில் எந்த அதிகாரிக்கும், ஊழியருக்கும் லீவு எடுத்துக்கொள்ளவோ, வேலைக்கு வராமல் இருப்பதற்கான அனுமதியோ வழங்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024