Tuesday, January 8, 2019


விருப்ப ஓய்வு பெற ஆர்வம் காட்டும் போலீசார் : பின்னணி என்ன?


Added : ஜன 07, 2019 22:03 |

மதுரை: உடல்நிலையை காரணம்காட்டி, விருப்ப ஓய்வு பெற போலீசார் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு மட்டும், 49 பேர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் : தமிழக போலீஸ் பணியில் சேர்ந்து படிப்படியாக ஏட்டு, சிறப்பு, எஸ்.ஐ., என, போலீசார் பதவி உயர்வு பெறுகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலானோர் பணிச்சுமை, மனஅழுத்தம், நேரத்திற்கு சாப்பிடாமை போன்ற பல்வேறு காரணங்களால், உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் போகின்றனர்.கையில் இருக்கும் அனைத்து விடுமுறை சலுகைகளையும் எடுத்த பிறகும், உடல்நலத்தை காக்க முடியாததால், வேறுவழியின்றி விருப்ப ஓய்வை தேர்ந்தெடுக்கின்றனர்.
விருப்ப ஓய்வு பெற்ற, எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன், எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பைபாஸ் சர்ஜரி செய்தேன். பணிச்சுமையால் ஏற்பட்ட டென்ஷன்தான் காரணம். தினமும் மன அழுத்தத்தால், 'பிபி' எகிறி பல பிரச்னைக்கு காரணமானது.இனியும், இந்த வேலையில் இருந்தால், பணியின்போதே இறந்துடுவேன் என குடும்பத்தினர் அஞ்சினர். அதனால், விருப்ப ஓய்வு பெற்று, அதில் கிடைத்த தொகையில் கடை ஒன்றை ஆரம்பித்து, இப்போது எந்த டென்ஷனும் இல்லாமல் நடத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சர்க்கரை நோய் : விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ள, எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது: எனக்கு இன்னும் நாலரை ஆண்டு, 'சர்வீஸ்' உள்ளது. ஆனால், உடல்நிலை ஒத்துக்கொள்ளவில்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என, ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது.இன்னும் இந்த வேலையில் தொடர்ந்தால், மனஅழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வந்துவிடும் என, பயமாக உள்ளது. குடும்பத்தை பார்க்க வேண்டியிருப்பதால், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்தாண்டு உடல்நலத்தை காரணம் காட்டி தமிழக அளவில், 49 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். இந்தாண்டு லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணி இருப்பதால், அதற்குள் விருப்ப ஓய்வு பெற்றுவிட வேண்டும், என சில போலீசார் ஆர்வம் காட்டி விண்ணப்பித்து வருகின்றனர்.இதனால், கடந்தாண்டைவிட இந்தாண்டு, எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024