டாக்டர்களின் மருத்துவ பதிவு சரிபார்க்க சுகாதார துறை உத்தரவு
Added : ஜன 19, 2019 01:49
மருத்துவர்கள் பதிவை, இம்மாத இறுதிக்குள் சரிபார்த்துக் கொள்வது கட்டாயம் என, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் படி, அலோபதி மருத்துவம் பயின்று, மருத்துவ சேவை புரிவோர், கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். இதற்கு, பிரத்யேக பதிவு எண் வழங்கப்படுகிறது. போலி மருத்துவர்கள், மருத்துவர்களின் நிபுணத்துவம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற, இப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தில், மாநில மருத்துவக் கவுன்சில், மருத்துவர்களின் அனைத்து தகவல்களையும் பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில், 'அனைத்து அரசு, தனியார் மருத்துவர்கள், தங்களது பதிவை, அந்தந்த மாநில மருத்துவக் கவுன்சிலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்' என, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவக் கவுன்சிலின் உத்தரவுப்படி, டாக்டர்கள் தங்களது பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துள்ள அனைத்து மருத்துவர்களும், இம்மாத இறுதிக்குள், அனைத்து தகவல்களையும் சரிபார்க்க வேண்டும்.போலி மருத்துவர்களை கண்டறியவும், நோயாளி, டாக்டர் விகிதாசாரத்தை கணக்கிடவும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
No comments:
Post a Comment