Sunday, February 17, 2019

தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம்

Updated : பிப் 17, 2019 05:09 | Added : பிப் 17, 2019 05:08

வாஷிங்டன்: சென்னையில், அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தீர்வு காணும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்த, 'காக்னிசென்ட்' நிறு வனம் முன்வந்துள்ளது.



அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் என்ற, கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம், நம் நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்காக, சென்னையில், 27 லட்சம் சதுர அடியில் புதிய வளாகம் கட்ட, 2014ல் பணிகள் நடந்தன. இந்த அலுவலக வளாகம் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்க, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர், 14 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இந்தத் தொகையை, அந்த வளாக கட்டுமான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அளிக்கும் படி, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவர் கார்டன் கோபர்ன், தலைமை சட்ட அதிகாரி, ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் கூறியுள்ளனர். அந்தத் தொகையை, கட்டுமான பணிகள் தொடர்பான கூடுதல் செலவாக, கணக்கு காட்டி செலுத்தி உள்ளனர்.



இதைத் தவிர, வேறு சில அதிகாரிகளுக்கும், இதே பாணியில், 11.41 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு லஞ்ச நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், காக்னிசென்ட் மீது, அந்த நாட்டின் பங்குச் சந்தை நடவடிக்கை எடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் செயல்படும்போது, லஞ்சம் கொடுப்பது தவறு. மேலும், லஞ்சம் கொடுத்ததை மறைத்து, கூடுதல் பணியை மேற் கொண்டதாக, கணக்கு காட்டப்பட்டு உள்ளது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கோபர்ன் மற்றும் ஸ்குவார்ட்ஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்துவதற்கு, காக்னிசென்ட் முன்வந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024