Tuesday, August 27, 2019

நகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே! இதையும் தெரிந்து கொள்ளுங்கள்!!

By வாணிஸ்ரீ சிவக்குமார் | Published on : 23rd August 2019 04:55 PM |


சிறுதுளி பெருவெள்ளம்

சிறுகக் கட்டிப் பெருக வாழ்

பணம் பத்தும் செய்யும் என்பதெல்லாம் சேமிப்பை வலியுறுத்தும் பழமொழிகள். ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்தில் முதல் செலவை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

சேமிப்பு என்பது பலவிதம். வங்கிக் கணக்கில் சேமித்து வைப்பது, முதலீடு, தங்கம் வாங்குவது, சீட்டு கட்டுவது என அதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. செலவிட இருக்கும் வழிகளோடு ஒப்பிட்டால் சேமிக்கும் வழிகள் குறைவுதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி நீங்கள் சேமிக்கிறீர்கள் என்றால் அதற்கு நிச்சயம் பாராட்டுகளும், லைக்குகளும் உண்டு.

பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மசாலாப் பெட்டிகளில் பணத்தை சேமித்து வைத்துக் கொள்வார்கள். அதை வைத்து தங்க நகைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம்.

இப்படி வீட்டில் வைக்கும் பணத்துக்கு வட்டி கிடைக்காது என்பதால்தான், தங்க நகைக் கடைகளில் சீட்டு சேரும் வழக்கம் ஏற்பட்டது. அவ்வாறு தங்க நகைக் கடைகளில் சீட்டு சேர்ந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டப் பணத்தை கட்டி வரும் போது, 10 அல்லது 15 மாதங்கள் நிறைவில், நகைக் கடையின் தரப்பிலும் ஒரு குறிப்பிட்ட தொகை சீட்டுத் தொகையுடன் சேர்த்து அளிக்கப்படும்.

இந்த சீட்டுத் தொகையை எப்போதும் பணமாகப் பெற முடியாது. அதே நகைக் கடையில் தங்க நகையாக மட்டுமே பெற முடியும்.

சரி, இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம். இதில் எந்தத் தவறும் இல்லை. ஏன் என்றால் சேமிப்பு என்பது எந்த வகையில் இருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஆனால், அதில் நமக்கு இவ்வளவு லாபம் கிடைத்தது என்று மகிழ்கிறோமே அங்குதான் ஒரு சின்னக் குறை இருக்கிறது.

தங்க நகைக் கடைகளில் சீட்டுக் கட்டி நகை வாங்கும் போது, நகைக் கடைகள் தரப்பில் கொடுக்கப்படும் ரொக்கம் என்பது உண்மையில் ஒரு ரொக்கமே அல்ல. அது ஒரு கண்கட்டு வித்தை என்பதுதான். அனைத்து தங்க நகைக் கடைகளிலும் இப்படி செய்வார்களா என்று தெரியாது? உண்மையில் சில அல்ல பல நகைக் கடைகளில் நடக்கும் ஒரு மாயாஜால வித்தையைப் பற்றி நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

அதாவது, நகைச் சீட்டு கட்டி ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால், நாம் அந்த நகையை தேர்வு செய்து பில் போடும் போது, அந்த நகையின் கிராம் அளவு மற்றும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை நகைக் கடைக்காரர்கள் கணக்கிட்டுச் சொல்வார்கள். அதுதான் அந்த மாயாஜால வித்தை. நாம் கையில் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நகையை வாங்கச் சென்றால், அந்த நகைக்கான செய்கூலி உதாரணத்துக்கு 5% என்றால், அதே நகையை நாம் சீட்டுக் கட்டி எடுக்கும் போது குறைந்தது 8% ஆக இருக்கும்.

எனவே, நகையின் கிராம் விலை 3,000 என்றால் அதற்கான செய்கூலியை உயர்த்துவதன் மூலம் நகைக் கடையில் நமக்குக் கொடுப்பதாகச் சொன்ன அந்த ஒரு சிறுத் தொகையை அவர்கள் கொடுப்பார்கள் ஆனால் நமக்குக் கிடைக்காது.

இதற்குப் பெயர்தான் வரும் ஆனால் வராது. எனவே, நகைக் கடையில் சீட்டுக் கட்டி நகை வாங்கும் போது ஏதோ ஒரு தொகையை நகைக் கடை நமக்குக் கொடுத்துவிட்டதாக நினைத்து ஏமாறாமல், இப்படி நம்மை அவர்கள் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டறிந்து கொள்வது நிச்சயம் நல்லது.

அப்படியும் இல்லை, அவர்களது கொள்கை இதுதான் என்றால், நகைக் கடையில் சீட்டு கட்டுங்கள். ஆனால் அவர்கள் நமக்காக ஒரு தொகையை செலுத்துகிறார்கள் என்று பரவசம் அடைய வேண்டாம். அவ்வளவே.

No comments:

Post a Comment

‘UGC will debar univs that are found violating PhD quality standards’ TALKING TO TOI

‘UGC will debar univs that are found violating PhD quality standards’ TALKING TO TOI  The University Grants Commission (UGC) is rolling out ...