Saturday, November 2, 2019

78ல் ஜெய்சங்கர் 13 படங்கள்; வெள்ளிக்கிழமை ஹீரோவின் சாதனை 

 1.11.2019




வி.ராம்ஜி

1978ம் ஆண்டு, ஜெய்சங்கர் நடித்து 13 படங்கள் வெளியாகின. இதில் பல படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடின.

1978ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் குறிப்பிடும்படியான ஆண்டு. இந்த வருடம்தான் எம்ஜிஆர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படம் வெளியானது. அதுவரை எம்ஜிஆர் - சிவாஜி என்று இருந்த கோதா மாறியது. சிவாஜி தனித்துவிடப்பட்டார். அதாவது போட்டியில்லை.

அந்த சமயத்தில், கமலும் ரஜினியும் மளமளவென படங்கள் பண்ணினார்கள். இதே காலகட்டத்தில், ஒருபக்கம் சிவகுமார், இன்னொரு பக்கம் விஜயகுமார், நடுவே ஜெய்சங்கர் ஆகியோரின் படங்கள் வந்துகொண்டிருந்தன.
ஆனாலும் ‘வெள்ளிக்கிழமை ஹீரோ’ என்கிற பெயர் ஜெய்சங்கருக்கு இந்த வருடமும் அவரிடமே ஒட்டிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட, அவர் நடித்த 13 படங்கள் இந்த வருடத்தில் (1978) வெளியாகின.

‘அவள் ஒரு அதிசயம்’ என்ற படம். இவருக்கு ஜோடியாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். அடுத்து ஸ்ரீவித்யாவுடன் இணைந்து ‘இளையராணி ராஜலட்சுமி’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் நல்ல கலெக்‌ஷனைக் கொடுத்தது.

அதேபோல், ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து நடித்த ‘உள்ளத்தில் குழந்தையடி’ என்கிற திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.



’இது எப்படி இருக்கு?’ என்ற படத்தில், ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் ஜெய்சங்கர். அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்ததும் அதைத்தானே! எனவே இந்தப் படமும் பி அண்ட் சி ஏரியாக்களில் சக்கைப்போடு போட்டது.
ஜெயசித்ராவுடன் இணைந்து ஜெய்சங்கர் நடித்த ‘சக்கைப்போடு போடு ராஜா; என்கிற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல், ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ‘டாக்சி டிரைவர்’ ஏக எதிர்பார்ப்புடன் வந்தது.அதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால்... இந்த ’டாக்சி டிரைவர்’ ஜெய்சங்கரின் 150வது படம்.

‘மக்கள் குரல்’ எனும் படம். ஜெய்சங்கர் நாயகன். பிரமீளா நாயகி. இந்தப் படம் ஓரளவு ஓடியது. ஆனாலும் முதலுக்கு மோசமில்லை. அப்படி ஜெய்சங்கரை வைத்து படமெடுத்து,எவரும் நஷ்டப்பட்டதுமில்லை.

இதேபோல், ‘முடிசூடாமன்னன்’ என்றொரு படம். ஜெய்சங்கரும் ஸ்ரீதேவியும் நடித்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில், மிகக் குறைந்த செலவில் படமெடுத்து, மிகக் குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்து, முடிசூடாமன்னனாகவே திகழ்ந்தார் ஜெய்சங்கர்.

இந்த வருடத்தில், ஜெய்சங்கரின் ஆஸ்தான ஹீரோயின் ஜெயசித்ரா எனும் நிலை கொஞ்சம் மாறியது. ஒருபடத்தில் ஸ்ரீதேவி நடித்தால், இன்னொரு படத்தில் ஸ்ரீப்ரியா ஜோடி. ஆனாலும் இந்த வருடத்தில் இவரும் ஸ்ரீப்ரியாவும் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் பலவும் ஹிட்டடித்தன. ‘மேளதாளங்கள்’ திரைப்படம் அப்படித்தான் பெரிய வெற்றியைச் சந்தித்தது. கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஆக்‌ஷன், கொஞ்சம் சென்டிமென்ட் என கலந்துகட்டி இருந்த இந்தப் படம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.

ஸ்ரீதேவியுடன் ‘ராஜாவுக்கேற்ற ராணி’ என்ற படம் சரியாகப் போகவில்லை. அதேசமயம், ஸ்ரீப்ரியாவுடன் நடித்த ‘வாழ நினைத்தால் வாழலாம்’ மிகப்பிரமாண்டமான வசூலை அள்ளியது. இருவருக்கும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில், ஜெயசித்ராவுடன் இணைந்து நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஏற்படுத்திய பரபரப்பு அந்தக் காலகட்டத்துக்காரர்களுக்கு இன்றுவரை மறக்காது. அப்போது ஆட்சிக்கு வந்துவிட்ட எம்ஜிஆரை அட்டாக் செய்து கதை பண்ணப்பட்டிருக்கும். இந்தப் படத்துக்க்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளையெல்லாம் தாண்டி, ‘வண்டிக்காரன் மகன்’ குதிரை வேகத்தில் சென்று வெற்றிக்கனியைப் பறித்தான்.

இந்தப் படங்கள் குறித்த இன்னொரு சுவாரஸ்யம்... இந்தப் படங்களின் தயாரிப்பு நிறுவனம் எதுவுமே மிகப்பெரிய கம்பெனி இல்லை. சின்னக் கம்பெனி, புதிய தயாரிப்பாளர்கள், சின்ன பட்ஜெட்டில் படமெடுத்தார்கள். எல்லோருக்கும் தோள் கொடுத்து தூக்கிவிட்டார் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...