Monday, November 4, 2019


'பிகில்' காட்சி ரத்து: தேவி திரையரங்க நிர்வாகம் விளக்கம் 






'பிகில்' காட்சி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேவி திரையரங்க நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தது ஏஜிஎஸ் நிர்வாகம். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படம் வெளியான ஒரே வாரத்தில் தமிழகத்தில் 100 கோடி வசூலைத் தாண்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உலகளவில் 2019-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் இலக்கையும் அடைந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இதனிடையே தேவி பாரடைஸ் திரையரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததால் காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த செய்தி வைரலாக பரவியது. மேலும், இந்தத் தகவல் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே சண்டையாகவும் உருவெடுத்தது.

இந்தச் சர்ச்சைத் தொடர்பாகத் தேவி திரையரங்கம், "இது உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான செய்தி. நாங்கள் 'பிகில்' படத்தைத் தேவி மற்றும் தேவி பாரடைஸ் என்ற இரண்டு பெரிய திரைகளில் திரையிடுகிறோம். தேவி 900 இருக்கைகளும், தேவி பாரடைஸ் 1100 இருக்கைகளும் கொண்டவை.

பொதுவாக ஒரு மல்டிப்ளெக்ஸில் 200 முதல் 250 சீட்கள் வரை மட்டுமே இருக்கும். எங்களுடைய சீட் எண்ணிக்கையைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு மல்டிப்ளெக்ஸின் ஒரு வாரத்துக்கான வசூல் எங்களுக்கு ஒரு நாளிலேயே கிடைத்து விடும். இப்படி தகவல்களை பரப்புபவர்களால் டிக்கெட் நியூ தளத்தை திறந்து தேவி மற்றும் தேவி பாரடைஸின் ரிசர்வேஷன்களை பார்க்க முடியாதா? டிக்கெட்டுகள் விற்றுக் கொண்டிருக்கின்றன.

இரண்டு பட தயாரிப்பாளர்களிடம் பேசி இரண்டாம் வாரத்தில் ’பிகில்’ படத்தைத் தேவியிலும் ’கைதி’ படத்தைத் தேவி பாரடைஸிலும் திரையிடுகிறோம். முதல் வாரத்தில் இரண்டு பெரிய திரைகளிலுமே ’பிகில்’ படத்தைத் திரையிட்டோம். இரண்டாம் வாரத்தில் ’கைதி’க்கு ஒரு பெரிய திரையை ஒதுக்கினோம். இரண்டாம் வாரத்தில் ’பிகில்’ திரைப்படம் தேவி மற்றும் தேவிகலாவில் திரையிடப்படும். மொத்தம் 8 காட்சிகள்” என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024