Monday, November 4, 2019


சிகிச்சை டைரி: அம்மா என்றால் துணிவு 


the hindu 




பிருந்தா சீனிவாசன்

அகந்தையும் ஆணவமும் மண்டிக்கிடக்கிறவர்களைச் சந்திக்க நேரிடும் போதெல்லாம் அவர்களை ஒரு நாளாவது புற்றுநோய் மருத்துவமனைக்கோ அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கோ அழைத்துச் சென்று அமரவைத்துவிடத் தோன்றும். வாழ்க்கையின் மகத்துவத்தை அந்த ஒரு நாள் அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடும். நாங்களும் அப்படித்தான் அதை உணர்ந்தோம். வாழ்தல் என்பது சுவாசிப்பது மட்டுமல்ல என்ற பாடத்தையும் பயின்றோம்.

ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய கோடை விடுமுறை. மகளுடன் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தேன். கோடைக்காலத்தில் அம்மாவுக்கு ஒவ்வாமையால் உடலில் தடிப்பு ஏற்படும். அந்த ஆண்டு அரிப்பும் தடிப்பும் அதிகமாக இருந்ததாகச் சொன்னார். அப்போது நாங்கள் வீடு கட்டிக்கொண்டிருந்தோம். வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் அப்படி இருக்கும் என அவரே சமாதானம் சொல்லிக்கொண்டார்.

ஆனால், மார்பில் அரிப்புடன் வலியும் இருக்கிறது என அம்மா சொன்னபோது ஏதோ நெருடலாகப் பட்டது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னபோது கூச்சத்தின் காரணமாக மறுத்துவிட்டார். அவரை வற்புறுத்தி மறுநாளே மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் மார்பைத் தொட்டதுமே கட்டி இருப்பதாகவும் அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் எனவும் சொல்லிவிட்டார். பயாப்ஸி எடுத்துவிட்டு வரச் சொன்னார்.

உறுதிசெய்த பரிசோதனை

மருத்துவர் பயாப்ஸி எடுக்கச் சொன்னதுமே காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றுவிடலாம் என்று அம்மா சொன்னார். காரணம், எங்களுக்குத் தெரிந்த ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு அங்கேதான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இரண்டு மார்பையும் நீக்கிவிட்டு நலமுடன் இருக்கிறார். அம்மாவும் மறுநாளே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வந்தார். அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதுவரை நாங்கள் பார்த்த அம்மாவுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்த பிறகு நாங்கள் பார்த்த அம்மாவுக்கும் அப்படியொரு வேறுபாடு.

கீமோவின் பாதிப்புகள்

அம்மாவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் நோயைவிடக் கவலையிலும் பயத்திலுமே உயிரை விட்டிருப்பார்கள். ஆனால், என் அம்மா உறுதியோடு இருந்தார்; எதையும் மோதிப் பார்த்துவிடும் திடத்துடன் இருந்தார். வரிசையாகப் போடப்பட்டிருந்த படுக்கைகளில் ஒரு படுக்கையின் மீது எங்கோ வெறித்துப் பார்த்தபடி அம்மா அமர்ந்துகொண்டிருந்த தோற்றம் உயிரை அறுப்பதாக இருந்தது.

கட்டி பெரிதாக இருப்பதால் முதலில் மூன்று முறை கீமோதெரபி கொடுத்துவிட்டுப் பிறகு அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் சொன்னார்கள். முதல் கீமோவுக்கே முடிகொட்டத் தொடங்கியது. தலைசுற்றலும் வாந்தியுமாக அவதிப்பட்டார். மூன்று கீமோவும் முடிந்த நிலையில் அம்மாவின் உடலிலிருந்த சக்தியெல்லாம் வெளியேறியதுபோல் இருந்தது. தலையில் கை வைத்தால் முடி கொத்து கொத்தாகக் கையோடு வந்தது. மொட்டையடித்துவிடும்படி அம்மா சொன்னார். தன்னுடன் சேர்த்து எங்கள் வீட்டின் மகிழ்ச்சி அனைத்தையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுவிட்டாரோ எனத் தோன்றியது. வீட்டில் ஒருவர் முகத்திலும் மலர்ச்சி இல்லை.

நம்பிக்கையளித்த அம்மா

ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய எங்கள் தீபாவளி மருத்துவமனையில்தான் கழிந்தது. அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்து இடப்பக்க மார்பை அகற்றினார்கள். நோயுற்றவரின் பொழுதுகள் எவ்வளவு நெடியவை என அதை அனுபவிப்பவருக்குத்தான் தெரியும். ஆனால், அனைத்தையும் எந்தவிதப் புகாரும் இல்லாமல் என் அம்மா எதிர்கொண்டார்.

அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பாடலும் கேட்க மாட்டார். மனத்தை மடை மாற்றும் எந்த வழியுமின்றி நாளெல்லாம் படுக்கையில் இருப்பது எவ்வளவு கொடுமை. ஆனால், அதை அம்மா வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. தன்னைப் பார்க்க வரும் உறவினர்களை அவர்தான் ஆற்றுப்படுத்துவார். சுற்றியிருப்பவர்களிடம் பேசுவார்; அவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் சொல்வார்.

அம்மாவைப் பார்க்க வாரம் ஒரு முறை மருத்துவமனைக்குச் செல்வேன். ஒவ்வொரு வாரமும் அம்மாவைச் சுற்றி ஒரு படுக்கை காலியாக இருக்கும். அந்தப் படுக்கையிலிருந்தவர் இறந்திருப்பார். தன்னைச் சுற்றி ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவுவதைப் பார்த்த பிறகும் அம்மாவின் கண்களில் ஒளி குறையவில்லை.

வாழ்வா, சாவா எனப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் வாழ்க்கை மீது பிடிப்புகொண்ட அம்மா எங்களுக்குப் பலவற்றை உணர்த்தினார். ‘காயமே இது பொய்யடா’ என அவர் புலம்பவில்லை; இருக்கும்வரை யாரையும் பகைத்துக்கொள்ளாமல் புகார் கூறாமல் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழக் கற்றுத்தந்தார். அம்மாவின் உறுதிதான் புற்றுநோயிலிருந்து அவரை மீட்டெடுத்தது. சிகிச்சை முடிந்து தற்போது ஏழாம் ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக.

மருத்துவரின் மனிதாபிமானம்

அந்த மருத்துவமனையில் நான் பார்த்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் வாழ்க்கையின் தரிசனத்தைத் துலக்கமாகக் காட்டின. பெண் மருத்துவர் ஒருவர் ஒட்ட வெட்டிய தலைமுடியுடன் இருப்பார். ஏன் அவர் அடிக்கடி மொட்டை அடித்துக்கொள்கிறார் என அம்மாவிடம் கேட்டேன். புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் அனைவரும் மொட்டைத்தலையுடன் இருக்கும்போது, தான் மட்டும் முடியுடன் இருப்பது நோயாளிகளுக்கு வேதனையாக இருக்கக்கூடும் என்பதால் அந்த மருத்துவர் எப்போதும் முடியைச் சிறியதாகக் கத்தரித்துக்கொள்வாராம்.

அம்மாவுக்காக எங்கள் வீட்டில் நாங்கள் யாருமே அப்படி யோசிக்கவில்லை. ஆனால், மருத்துவர் ஒருவர் தன் நோயாளிகளுக்காக மனிதநேயத்துடன் யோசித்தது ஆச்சரியப்படுத்தியது. அவருடைய கணவரும் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர். இருவரும் ஒருவருடைய சம்பளப் பணத்தை மட்டும்தான் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்களாம். மற்றவருடைய சம்பளத்தை மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏதாவது வாங்குவதற்குத் தந்துவிடுவார்களாம். அதைக் கேட்டதும் பேச்சற்று நின்றுவிட்டேன்.

வாழ்வின் நிதர்சனம்

அம்மாவுக்குக் கதிரியக்க சிகிச்சை என்பதால் அன்று நான் வெளியே காத்திருந்தேன். அப்போது அங்கே இருந்த தாத்தாவும் பாட்டியும் சண்டை போட்டபடி இருந்தனர். தாத்தா ஒன்று சொல்ல, பாட்டி இரண்டாகச் சொல்லச் சண்டை தொடர்ந்தபடி இருந்தது. பிறகு தாத்தா தந்த மஞ்சள் பையை உள்ளே வைத்துவிட்டு வருவதற்காகச் சென்றார் பாட்டி. அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண் ஒருவர், “ஏன் இப்படி அந்தம்மாவைத் திட்டுற. அதுவே ஆபரேசன் முடிஞ்சு கஷ்டப்பட்டுட்டு இருக்குதுதானே?” எனத் தாத்தாவிடம் கேட்டார்.

தாத்தாவோ, “அதை ஏம்மா கேக்கறே. இந்த அம்மா இல்லாம வூடு வூடாவே இல்லை. ஒரு வாய் தண்ணிகூடக் குடிக்கப் பிடிக்கல. பழம் கிழம்னு நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கிட்டு சீக்கிரம் வூட்டுக்கு வந்தாதானே. அதை வுட்டுட்டு காசு இல்லைன்னு எதையும் சாப்பிடாம இருக்குதும்மா” என்று சொல்லும்போதே குரல் உடைந்து அழுதுவிட்டார். அவ்வளவு நேரம் நடந்தது அன்புச் சண்டை! தாத்தாவைச் சாப்பிடச் சொல்லி பாட்டியும் பாட்டியைச் சாப்பிடச் சொல்லி தாத்தாவும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் போல.

இப்படி எத்தனையோ நிகழ்வுகளின் மூலம் அம்மாவும் அந்த மருத்துவமனையும் அது சார்ந்த மனிதர்களும் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ எதையுமே ஓரளவுக்காவது தள்ளி நின்று அணுக முடிகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒளிகூடித் தெரிகிறது.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024