விவாதம்: இந்த மரணத்துக்கு யார் பொறுப்பு?
https://www.hindutamil.in/news/supplements/penn-indru/523212-debate.html
க்ருஷ்ணி
தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்த ஆண்டின் தீபாவளி துயரம் நிறைந்ததாகக் கழிந்திருக்கும். ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆதரவு வேண்டி மேல் நோக்கி நீண்டிருந்த கைகளும் அழுகையொலியுமாகவே பலரது நெஞ்சங்களில் நிலைகொண்டுவிட்டான் இரண்டு வயது மழலை சுஜித்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப் பட்டியைச் சேர்ந்த சுஜித் வில்சன், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக் குள் தவறி விழுந்ததும் அவனை மீட்பதற்காக நடந்த மீட்புப் பணிகளும் ஓர் உயிரின் மரணப் போராட்டத்தை நேரலையில் காட்சிப்படுத்திய ஊடகங்களும் அவற்றைத் தொடர்ந்த சமூக வலைத்தள பதிவுகளும் பலவற்றை உணர்த்தியிருக்கின்றன.
அன்றே சொல்ல நினைத்தோம்; ஆனால், அப்படியொரு சூழலில் அதைச் சொல்ல வேண்டுமா எனத் தவிர்த்தோம் என அந்தக் குழந்தையின் பெற்றோருடைய குழந்தை வளர்ப்பு குறித்து சிலர் மேட்டிமைத்தனத்தோடு கருத்துச் சொல்ல, இன்னும் சிலரோ அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு வகுப்பெடுத்தனர். சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறித்து சிலர் மோசமாகப் பதிவிட்டனர்.
‘புள்ளையே போச்சு. அந்தப் பணத்தை வாங்க உனக்கு எப்படி மனசு வந்தது?’ என்ற கருத்தை மையமாக வைத்து மிக நாகரிகமான வார்த்தைகளில் வசைமாரி பொழிந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த நல்லிதயக்காரர்களே. இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டியதுபோல் அந்தக் குழந்தையின் மதத்தைச் சுட்டிக்காட்டி, தீபாவளிக் கொண்டாட்டங்களை மழுங்கடிக்கத் தான் இப்படியொரு நாடகம் என்ற பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய கருத்தை உதிர்த்தனர்் இந்து சொந்தங்கள் சிலர். இவ்வளவு கேவலங்களுக்கு நடுவே மகனைத் தொலைத்த அந்தத் தாயின் கதறல் யாருடைய செவியையும் எட்டவில்லை.
எது தவறு?
இதற்கிடையே சுஜித்தின் மீட்புப் பணிகளை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த தம்பதியரின் குழந்தை நீர்த்தொட்டிக்குள் விழுந்து மரணிக்க, இது போதாதா கருத்துச் சொல்பவர்களுக்குத் தூபம் போட. பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதுமா; அதைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டாமா என மீண்டும் காவியம் பாடத் தொடங்கினர். எல்லாம் சரிதான்.
ஆனால், எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் புதைக்க தங்கள் தோட்டத்திலேயே கல்லறை சமைப்பதில்லை என்பதை அந்த மேட்டிமைவாதிகளுக்கு யார் சொல்வது? அனைவரும் அவரவர் சூழலுக்கும் பொருளாதார வலுவுக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளை வளர்ப்பார்களே தவிர அவர்களைச் சாகக் கொடுப்பதற்கான வழிகளை உருவாக்கிவைக்க மாட்டார்கள்.
விபத்துக்கும் எதிர்பாராத விபரீதத்துக்கும் பொருள் தெரியாதவர்களே இப்படியெல்லாம் பிதற்றித் திரிவார்கள்.
சாதி, மதம், இனம், வர்க்கம், பொருளாதாரம் என அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளில் அனைத்தையும் ஒரே தராசில் வைத்துத் தீர்ப்பு வழங்குவதைவிடக் கேவலம் வேறில்லை. எதிர்பாராத விபரீதம் நிகழும்போது பெற்றோரைக் குற்றவாளியாக்குவது நியாயமா? கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறை மூடாதது அவர்களுடைய தவறுதான். அதற்காக அவர்களைக் கொலைகாரர்கள் போன்று சித்தரிப்பது அதைவிடத் தவறல்லவா?
அரசுக்குப் பொறுப்பு இல்லையா?
இந்தச் சமூகத்தில் குழந்தை என்பது ஒரு குடும்பத்தின் சொத்தல்ல. அதன் வளர்ச்சியில் சமூகத்துக்கும் அரசுக்கும் பங்கு இருக்கிறது. அந்த வகையில் சுஜித்தின் மரணத்துக்கு சமூகமும் அரசும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டுமல்லவா? கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டியது தனி மனித பொறுப்பு என்றால், அவற்றைக் கணக்கெடுத்து கண்காணிப்பது அரசின் பொறுப்புக்குள் வராதா? மக்களிடம் தனி மனித பொறுப்பு இல்லை; அதனால் நாங்களும் எதுவும் செய்ய மாட்டோம் என்று சொன்னால், அது மக்கள் நல அரசாங்கமா?
சட்டப்படி பார்த்தால் அந்தப் பெற்றோரைக் கைது செய்திருக்க வேண்டும்; இதே போன்ற சம்பவம் வெளிநாட்டில் நடந்தால் முதலில் பெற்றோரைத் தண்டித்துவிட்டுத்தான் குழந்தையைக் காப்பாற்றியிருப்பார்கள் என்ற உலகத்தரம் வாய்ந்த கருத்துகளையும் சிலர் சிதறவிட்டிருந்தனர். அவர்கள் குறிப்பிடும் நாடுகளும் நடுகாட்டுப்பட்டியும் ஒன்றா? அந்த நாடுகளின் அரசு செயல்படும் விதமும் இந்திய – தமிழக அரசுகள் செயல்படும் விதமும் ஒன்றா என்பதைப் பகுத்தறிய தெரிந்தவர்கள் இப்படியான கருத்து முத்துகளை வீணடித்திருக்க மாட்டார்கள்.
உயிர்ப்பலி வேண்டுமா?
சுஜித்தின் பெற்றோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடித்த பலருக்கும் அரசின் செயல்பாடு குறித்து எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. மிகப் பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை வைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நம் நாட்டில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையை மீட்கக் கருவியொன்றை வடிவமைக்கும் அளவுக்கு யாருக்கும் திறமையில்லை என்பதை என்னவென்று சொல்வது? விழுகிற குழந்தைகள் எல்லாமே வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் என்பதால் அரசின் அவசரப் பட்டியலில் இப்படியான கருவிகள் எல்லாம் இடம்பெறாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
மீட்புப் பணிகளுக்காக 11 கோடி ரூபாயைச் செலவிட்டதாகப் பட்டியல் வெளியிட்டிருக்கும் அரசு, மீட்புக் கருவியை வடிவமைப்பதற்கென அதில் சிறு தொகையையாவது ஒதுக்கியிருக் கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே குழந்தைகள் குழிக்குள் விழுகிறார்கள்; இறப்பு எண்ணிக்கை அதிகரித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்; அதுவரை கயிற்றை வைத்தே மக்களைச் சமாளித்துவிடலாம் எனக் காத்திருக்கிறதா?
எதுவொன்றுமே இங்கே சட்டமாக்கப்படவோ, சட்டம் அமலாக்கப்படவோ, அது தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவோ வேண்டுமென்றால் யாராவது ஒருவர் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட ‘நீட்’ அனிதா, சேலம் ராஜலட்சுமி, ‘பேனர்’ சுபஸ்ரீ, ‘ஆழ்துளைக் கிணறு’ சுஜித் வரிசையில் இன்னும் எத்தனை உயிர்கள் தேவைப்படும் எனத் தெரியவில்லை.
நீங்க என்ன சொல்றீங்க?
பால் மணம் மாறாத மழலையின் மறைவுக்குப் பிறகு பேசுபவை எல்லாம் வெட்டிப் பேச்சுதான் என்று ஆகிவிடக் கூடாது என்பதுதான் இந்த விவாதத்தின் நோக்கம். குழந்தை சுஜித்தின் மரணத்துக்கு யார் பொறுப்பு? எப்படிச் செயல்பட்டிருந்தால் அந்தக் குழந்தையின் மரணத்தைத் தடுத்திருக்கலாம்? பரபரப்பு அரசியலுக்கு சுஜித்தின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்களை என்ன செய்வது? இதில் உங்கள் கருத்து என்ன? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்; விவாதிக்கலாம்.
https://www.hindutamil.in/news/supplements/penn-indru/523212-debate.html
No comments:
Post a Comment