Saturday, November 9, 2019


விபத்துகளுக்கு காரணமாகும் புறவழிச் சாலைகள் 







எஸ்.விஜயகுமார்.

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் ஒன்றான, சேலம்- உளுந்தூர்பேட்டை நான்கு வழிச் சாலையில், 8 இடங்களில் உள்ள புறவழிச் சாலைகள் இரு வழிச்சாலைகளாக உள்ளன. இதனால், நாளுக்குநாள் விபத்து அபாயம் அதிகரித்து வருவதால், இந்த புறவழிச் சாலைகளை உடனடியாக நான்கு வழிச்சாலை களாக மாற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரள மாநிலத்தின் கொச்சி, திருச்சூர், பாலக்காடு நகரங்களை சென்னையுடன் இணைக்கும் பிரதான சாலையாக சேலம்- உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை உள்ளது. குறிப்பாக, இந்தச்சாலையை கொங்கு மண்டலத்தின் நுழைவு வாயில் என்றும் கூறலாம்.

சேலம்- உளுந்தூர்பேட்டையை இணைக்கும் இந்த 136 கிமீ., நீள நெடுஞ்சாலை, ஒரு முனையில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையையும், மறுமுனையில் பெங்களூரு- மதுரை மற்றும் சேலம்- கோவை நெடுஞ்சாலைகளை இணைக்கிறது. இந்த சாலையில், தினந்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன.

இருப்பினும், பல்வேறு காரணங்களால் பாதுகாப்பற்ற சாலையாகவே இருந்து வருகிறது. இதனை 4 வழிச்சாலை என்று கூறினாலும், புறவழிச்சாலைகள் அனைத்தும் இரு வழிச்சாலையாகவே உள்ளன.

குறிப்பாக, சேலம் மாநகரை அடுத்த உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், இலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை என 8 இடங்களில் உள்ள புறவழிச் சாலைகள் இரு வழிச்சாலையாகவே உள்ளன.

4 வழிச்சாலையில் சராசரியாக மணிக்கு 100 கிமீ., வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள், திடீரென இரு வழிச்சாலையில் நுழைய வேண்டியுள்ளது. சென்டர் மீடியன் கூட இல்லாத இரு வழிச்சாலையில், அதிவேக வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்லும்போது விபத்து ஏற்படுகிறது.

பல உயிர்களும் பலியாகிவிட்டன. இந்தச்சாலை நெடுகிலும் எண்ணற்ற கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள், 4 வழிச்சாலையை கடப்பதற்கு எந்தவொரு கிராமத்திலும் சுரங்க நடைபாதை அமைக்கப்படவில்லை. இதுவும் விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

புறவழிச்சாலை அமைந்துள்ள ஒவ்வோர் ஊரில் இருந்தும் வெளியேறும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் 4 வழிச்சாலையின் குறுக்கே புகுந்து, மறுபுறம் உள்ள சாலையை அடைய வேண்டி உள்ளதாலும் விபத்து ஏற்படுகிறது. எனவே, சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் உள்ள 8 புறவழிச் சாலைகளையும் உடனடியாக, 4 வழிச்சாலையாக மாற்று
வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சேலம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளரும் சமூக ஆர்வலருமான எஸ்.என்.செல்வராஜ் கூறும்போது, ‘ சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப் பட்டிருப்பதால், ஏராளமான விபத்துகள் நிகழ்ந்து, அவற்றில் பலர் உயிரிழந்துவிட்டனர்.

இது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் அச்சமூட்டுபவையாக உள்ளன. இந்த சாலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 2012-ம் ஆண்டு ஜனவரி முதல் 2017 ஜூன் வரையிலும் 344 விபத்துகள் ஏற்பட்டு, அதில் 117 பேர் உயிரிழந்துவிட்டனர். 126 பேர் படுகாயமடைந்தனர்.

இதே சாலையில் சேலம் மாவட்ட எல்லையில் தொடங்கி உளுந்தூர் பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) வரையிலான சாலையில் 2012-ம்
ஆண்டு தொடங்கி 2019 அக்டோபர் வரை 1,573 விபத்துகள் நிகழ்ந்து, அவற்றில் 417 பேர் உயிரிழந்து விட்டனர். 53 பேர் படுகாய
மடைந்தனர். ஒட்டுமொத்தமாக சேலம்- உளுந்தூர் பேட்டை 4 வழிச்சாலையில், 2012-ம் ஆண்டு தொடங்கி 2019 வரை சுமாராக 2 ஆயிரம் விபத்துகள் நிகழ்ந்து, 530-க்கும் மேற்பட்டோரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி 2013-ம் ஆண்டுக்குள் புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தாலும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை இனியும் பலி கொடுக்கக் கூடாது என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024