Tuesday, November 19, 2019

கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'

Updated : நவ 19, 2019 06:44 |


ராமநாதபுரம்: 'ஆதரவற்ற விதவைச் சான்றுக்கான விதிகள் என்ன' என ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் திடீர் தேர்வு நடத்தினார். இதில் தாசில்தார், துணை தாசில்தார்கள் தோல்வி அடைந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், 'ஆதரவற்ற விதவைச் சான்று பெற தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தேன். தகுதியில்லை என கூறிவிட்டனர். சான்று வழங்க வேண்டும்' என மனு அளித்தார். தாசில்தாரை அழைத்த கலெக்டர் வீரராகவ ராவ், அந்த சான்றுக்கான விதிகள் குறித்து கேட்டார். அதற்கு தாசில்தார், 'ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமானம் இருக்க வேண்டும். சொத்து இருக்க கூடாது' என்றார். மற்றொரு தாசில்தாரிடம் கேட்டதற்கு, அவர் வேறு விதிகளை கூறினார்.

இதையடுத்து, 'சான்று பெற என்ன விதிகள் என எழுதி உங்கள் பெயரையும் எழுதிக் கொடுங்கள்' என தாசில்தார், துணை தாசில்தார்களுக்கு உத்தரவிட்டார். பத்துக்கும் மேற்பட்டோர் எழுதிக் கொடுத்தனர்.

அதை படித்த கலெக்டர், 'நீங்கள் எழுதியது அனைத்தும் தவறு. 2006 அரசாணையின் படி மாத வருமானம் ரூ.4000க்குள், ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரத்திற்குள் இருக்கலாம். மறுமணம் செய்திருக்க கூடாது. இந்த இரண்டு தகுதியும் இருந்தால் சான்று வழங்கலாம். சொந்த வீடு இருந்தலோ, வாடகைக்கு விட்டிருந்தாலோ மாத வருமானம் ரூ.4000க்குள் இருந்தால் அவர்களுக்கும் வழங்கலாம். அரசாணையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இது தெரியாமல் விண்ணப்பத்தை நிராகரிப்பது அநீதி' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024