Saturday, January 4, 2020

`எங்களுக்கே வேலை இல்லை, இவர்கள் எதற்கு?!' -தஞ்சையில் பூட்டு போடப்பட்ட வடமாநிலத்தவர் கடைகள்

கே.குணசீலன்ம.அரவிந்த்  vikatan

தஞ்சாவூரில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என ஓர் அமைப்பினர் திடீரென பூட்டு கொண்டு பூட்டியதுடன், நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டி விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையில் கடைகளுக்கு சீல்

தஞ்சாவூரில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் கடைகளுக்குப் பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். அத்துடன் கதவில் நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதில் `தமிழக அரசே, வந்து குவியும் வட மாநிலத்தவர்களை வெளியேற்று. தமிழகத்தில் அதிக அளவில் வெளிமாநிலத்தவர்கள் உள்ளதால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் இங்கு அதிக அளவிலான கடைகள் நடத்தி வருவதால் தமிழர்கள் உரிமைகளும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படுகின்றன.

தஞ்சையில் கடைகளுக்கு சீல்

தரகர்கள் சிலர் வடமாநிலத்தவர்களை இங்கு வேலைக்காக இறக்குமதி செய்கின்றனர். அவர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறோம். நாங்களாகச் சொல்லும்போதே கிளம்பிப் போ இல்லை என்றால் நாங்கள் அடித்து விரட்டுவோம்' என்ற வாசகங்கள் அந்த நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை வழக்கம் போல் கடைகளைத் திறக்க வந்த வட மாநிலத்தவர்கள் பூட்டு போடப்பட்டிருப்பதையும் நோட்டீஸ் ஒட்டியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

இதுகுறித்து தமிழத் தேசியக் கட்சியை சேர்ந்த தமிழ்நேசன் என்பவரிடம் பேசினோம். `` அரசு வேலை தொடங்கி தனியார் வேலை வரை அனைத்திலும் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதிலுமே வட மாநிலத்தவர்கள் ஏராளமான கடை மற்றும் வணிக நிறுனங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சு மிட்டாய் தொடங்கி பஞ்சு மெத்தை வரை அவர்கள்தான் விற்பனை செய்து வருகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் தமிழர்களின் நிறுவனங்கள் மற்றும் கடைகளிலும் வட மாநிலத்தவர்கள்தான் வேலை செய்து வருகிறார்கள். இதனால் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வளமும் சுரண்டப்படுகின்றன. இப்படியே போனால் தமிழகமும் வட மாநிலமாகிவிடும் சூழல் உண்டாகும்.

தமிழர்களின் வணிகம் அனைத்தும் வட மாநிலத்தவர்கள் கைக்கு சென்றது கொடுமை. அதனால் தமிழக அரசு வடமாநிலத்தவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநிலத்தவர்கள் அவர்களாகவே திரும்பி செல்ல வேண்டும் என அமைதியாக சொல்லி வந்தோம். ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம். இதனை சுட்டிக் காட்டும்விதமாகத்தான் தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள வட மாநிலத்தவர் கடைகளுக்குப் பூட்டு போட்டோம்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024