Saturday, January 4, 2020

ஒளி நகல் ஜெராக்ஸ் ஆனது ஏன்? இந்த விஷயம் அமெரிக்காவுக்கு தெரியுமா? #MyVikatan

விகடன் வாசகர்


இந்தியாவில் இது, ஜெராக்ஸ் (Xerox) இயந்திரம் என அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிந்தனைகளை பல தலைமுறைக்கு கடத்தும் வாகனமாக இருப்பது எழுத்துகள். மனிதன் கல்லில் எழுதினான். துணியில் எழுதினான். பனை ஓலையில் எழுதினான். இவை நம்மில் எல்லோருக்கும் தெரிந்தவையே. தமிழர்கள் தாமரை மடலில் எழுதியது தொடர்பான குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இருப்பதாக ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதன் மூலம் அறிந்தேன்.

காகிதத்தில் எழுதும் பழக்கம் வரும் வரை, எழுத்து என்பது குறிப்பிட்ட சிலருக்கானதாகவே இருந்தது. காகிதத்தில் பென்சில் மற்றும் பேனா வைத்து எழுதும் முறை, எழுத்தறிவை பலருக்கு புகட்டியது. காகிதத்தில் ஒருவர் எழுதுவது மூலப்பிரதி. அதன் நகல் வேண்டுமென்றால், மூலப்பிரதியைப் பார்த்து மீண்டும் எழுத வேண்டும்.

கார்பன் காகிதங்கள் நகல் எடுப்பதில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு காகிதத்தின் கீழே ஒரு கார்பன் காகிதத்தை வைத்து இன்னொரு காகிதத்தை அதன் கீழே வைத்து எழுதினால், ஒரே நேரத்தில் மூலமும் அதன் நகலும் கிடைக்கும்.

இந்த முறையில் அழுத்தி எழுதி இரண்டு மூன்று நகல்கள் கூட எடுக்க முடியும். வழக்கம்போல, நகல் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு. அதுதான் ஒளி நகல் இயந்திரம் (Photo Copier Machine). ஒரு காகிதத்தில் எழுதியவற்றை ஒளி நகல் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான நகல்கள் எடுக்க முடியும். இந்த நகலை எடுப்பதற்கு ஒளியை பயன்படுத்துவதால், இது ஒளி நகல் இயந்திரம் என்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இது, ஜெராக்ஸ் (Xerox) இயந்திரம் என அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? ஒளி நகல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தது அமெரிக்காவில் உள்ள ஜெராக்ஸ் (Xerox) என்ற நிறுவனம். அவர்கள் கண்டுபிடித்த ஒளி நகல் இயந்திரத்தை `ஜெராக்ஸ்' என்று அழைப்பது விநோதமானதே.

உதாரணமாக, மோட்டோரோலா (Motorola) நிறுவனம் கண்டுபிடித்த செல்போனை (Cellphone), செல்போனை எடுத்து வா என்று சொல்கிறோம். மோட்டோரோலாவை எடுத்து வா என்று சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் விநோதமாக இருக்குமில்லையா? ஆனால், ஒளி நகல் எடுத்து வா என்று சொல்வதற்குப் பதிலாக, ஜெராக்ஸ் எடுத்து வா என்று சொல்கிறோம். இது விநோதமானது மட்டுமல்ல, தவறும் கூட.

எனவே, இனிமேல் ஒளி நகல் எடுத்து வாருங்கள் என்றோ ஒளி நகல் எடுக்கச் செல்கிறேன் என்றோ சொல்லிப் பழகுவோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024