வங்கிகள் இணைப்பு வாடிக்கையாளர்கள் தவிப்பு
Added : ஜூலை 13, 2020 22:18
சென்னை : 'இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டாலும், காசோலை தொடர்பான சேவைகளை, இரண்டு வங்கிகளிலும் பெற முடியவில்லை' என, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பரிவர்த்தனை
இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி, ஏப்ரல் 1 முதல் இணைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இரண்டு வங்கிகள் இணைக்கப்பட்டது முதல், காசோலை தொடர்பான பரிவர்த்தனை சேவைகள் துவங்கப்படவில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, வாடிக்கையாளர்கள் கூறியதாவது:இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டது. அப்போது முதல், அலகாபாத் வங்கியின் பெயர் பலகைகள், இந்தியன் வங்கியாக மாற்றப்பட்டன. பெயர் பலகை மட்டும் மாறி உள்ளதே தவிர, அனைத்து சேவைகளையும் பெற முடியவில்லை.
இந்தியன் வங்கியில், அலகாபாத் வங்கி காசோலையை கொடுத்தாலும், அலகாபாத் வங்கியில், இந்தியன் வங்கி காசோலையை கொடுத்தாலும், அதன் மீது பரிவர்த்தனை மேற்கொள்ள மறுக்கின்றனர்.'மென்பொருள் இணைக்கப்படவில்லை; சர்வர் இணைக்கப்படவில்லை' என கூறி, திருப்பி அனுப்புகின்றனர்.எனவே, விரைவில் அனைத்து சேவைகளும் வழங்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அடிப்படை சேவைஇது குறித்து, இந்தியன் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:இரண்டு வங்கிகள் இணைக்கப்பட்டாலும், தொழில்நுட்ப ரீதியில் முழுமையாக இணையவில்லை. பணம் செலுத்துதல், இருப்பு விபரம் அறிந்து கொள்ளுதல் போன்ற அடிப்படை சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
தொழில்நுட்ப பணிகள் முழுமையடைய, சில மாதங்கள் பிடிக்கும். அதுவரை, காசோலை பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment