ரூ. ஏகாம்பரநாதர் சொத்து மீட்பு
Added : ஜூலை 23, 2020 23:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, 192 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நேற்று மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல இடங்களில் உள்ளன. இதில், சென்னை, கீழ்ப்பாக்கம் அருகே, 32 கிரவுண்ட் நிலத்தை, கலவலகண்ணன் என்ற, அறக்கட்டளை நிர்வாகம் பயன்படுத்தி வந்தது.கடந்த, 1999ல், இதன் குத்தகை காலம் முடிந்தது; ஆனாலும், அறக்கட்டளை நிர்வாகம் தொடர்ந்து, நிலத்தை பயன்படுத்தியதை அறிந்த கோவில் நிர்வாகம், அதற்கான குத்தகை தொகை, 13 கோடி ரூபாய் தரும்படி கோரியது. அறக்கட்டளை நிர்வாகம், அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, கோவில் நிலத்தை மீட்க, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகமும் வழக்கு நடத்தியது. இதில், கோவில் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர், போலீஸ் பாதுகாப்புடன், கீழ்ப்பாக்கம் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை, நேற்று மீட்டு, 'சீல்' வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி சாலை அருகே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 110 கிரவுண்ட் நிலம் இருக்கிறது.
இதில், 32 கிரவுண்ட் மட்டும், அறக்கட்டளை நிர்வாகத்திடம் இருந்து, நேற்று மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு, 192 கோடி ரூபாய். இங்குள்ள எஞ்சிய நிலங்களையும், மற்றவர்களிடம் இருந்து மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment