Friday, July 24, 2020

பொருளாதார இட ஒதுக்கீட்டுக்காக பெறப்படும் வருமானச் சான்றிதழ்; நிபந்தனையை நீக்கக் கோரும் வழக்கு: அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


பொருளாதார இட ஒதுக்கீட்டுக்காக பெறப்படும் வருமானச் சான்றிதழ்; நிபந்தனையை நீக்கக் கோரும் வழக்கு: அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை  24.07.2020

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான வருமானச் சான்றிதழ்களில் உள்ள நிபந்தனைகளை நீக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற தாசில்தாரர்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என்று தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நல சங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பிலும், தனிநபர்கள் சார்பிலும் சென்னை உயர் நீ்திமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வருவாய் மற்றும் சொத்துச் சான்றிதழை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ''தமிழக அரசு வழங்கும் சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ்களை, மத்திய அரசுப் பணிகள் அல்லது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இட ஒதுக்கீடு அளிக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியாது என்பதால் இந்த நிபந்தனை இல்லாமல் வழங்க உத்தரவிட வேண்டும்'' என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண், ''மத்திய அரசின் விதிகளின்படியே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக உரிய விளக்க மனுவைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.


No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...