வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் : அருளும் பொருளும் தருவாள்; வீட்டுக்கே வருவாள்!
அம்பாளைக் கொண்டாடக் கூடிய மாதம், ஆடி. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று மகாவிஷ்ணு அருளினார். அதேபோல், ’மாதங்களில் நான் ஆடி’ என்கிறாள் மகாசக்தி. அப்பேர்ப்பட்ட ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான பண்டிகை... வரலட்சுமி விரதம்.
ஆடி மாத அமாவாசை முடிந்ததும் வளர்பிறை தொடங்கும். இந்த வளர்பிறை நாளில், பெளர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் வருவதுதான் வரலட்சுமி விரதம்.
எந்த வீட்டிலெல்லாம் வரலட்சுமி விரத பூஜைகள் செய்யப்படுகிறதோ... அந்த வீட்டுக்கு மகாலட்சுமி வருவாள். வருவதுடன் வீட்டிலேயே இருந்து வாசம் செய்வாள். நம் இல்லத்தில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி, சும்மா இருந்துவிடுவாளா? நம்மையும் நம் கஷ்டங்களையும் பார்த்துக் கொண்டு விட்டுவிடுவாளா? இதுவரை இருந்த துக்கங்களையும் கஷ்டங்களையும் போக்கியருள்வாள் தேவி என்கிறது புராணம்.
ஐஸ்வர்ய யோகங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம், இந்த முறை, வருகிற 31.7.2020 வெள்ளிக்கிழமை வருகிறது. இந்தநாளில், மறக்காமல், இந்த பூஜையைச் செய்யுங்கள். தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்து, தாலி வரத்தைத் தந்து மங்கல வாழ்வு தரும் மகத்தான பண்டிகையை மறக்காமல் செய்யுங்கள்.
முதல்நாளான வியாழக்கிழமையன்று, வீட்டைச் சுத்தப்படுத்துங்கள். பூஜையறையைச் சுத்தம் செய்யுங்கள். சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமமிட்டு தயார் செய்து கொள்ளுங்கள். பூஜையறையில் ஏற்றப்படும் விளக்குகளையும், தாம்பாளங்களையும் நன்றாகத் தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
சரி... வரலட்சுமி பூஜை செய்வது எப்படி?
எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதல் வணக்கமும் முதல் வழிபாடும் முதல்வன் விநாயகப் பெருமானுக்குத்தானே! எனவே, பிள்ளையாரை முதலில் வணங்கவேண்டும். ’அப்பா, பிள்ளையாரப்பா. இந்த வரலட்சுமி பூஜையை உன்னை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். நீதான் பூஜை நல்லபடியா நடக்க துணை இருக்கணும்’ என்று வேண்டிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். பூஜைக்கு அரணாக இருந்து அருளுவார் பிள்ளையாரப்பன்.
அலம்பி வைத்த தாம்பாளத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பூஜையறையில் கோலமிடுங்கள். இன்னொரு கோலமிட்டு, அதன் மேல் தாம்பாளத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதில், பச்சரிசியைப் பரப்பிவைத்துக்கொள்ளுங்கள். அரிசியின் மீது கலசத்தை வைக்கவும்.
பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வைக்கவேண்டும். மாதுளை, ஆரஞ்சு, விளாம்பழம், திராட்சை, மாம்பழம் முதலான பழங்களையும் லட்டு அல்லது வேறு ஏதேனும் இனிப்பு, தயிர், தேன், நெய், கற்கண்டு, கொழுக்கட்டை, பசும்பால் முதலானவற்றை நைவேத்தியத்துக்கு வைத்துக் கொள்ளவேண்டும்.
இப்போது, பூஜைக்குத் தேவையானவை தயாராக இருக்கிறதுதானே.
வீட்டு வாசலில், அதாவது வீட்டு நிலைவாசலில் நின்றுகொண்டு, வெளிப்பகுதியைப் பார்த்து, கற்பூர ஆராதனை காட்டவேண்டும். ‘மகாக்ஷ்மியே. எங்கள் குலவிளக்கே. எங்கள் வம்ச விருட்சமே. கருணை கொண்டவளே... எங்கள் வீட்டுக்கு வா தாயே’ என்று அவளை, தேவியை, லட்சுமியை, மகாலக்ஷ்மியை அழையுங்கள்.
அழைத்தால் வராமலா இருப்பாள் அன்னை? வந்துவிட்டாள். இப்போது பூஜையறைக்குச் சென்று, கலசத்துக்கு எதிரே அமர்ந்துகொண்டு, ஆவாஹனம் செய்து மகாலக்ஷ்மியை மனதார வேண்டுங்கள். கலசத்துக்கு பூக்களாலும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யுங்கள். குளிரக்குளிர பூஜைகள் செய்யுங்கள். ஸ்தோத்திரம் சொல்லுங்கள். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள்.
இதையடுத்து, நோன்புக்கயிறை கும்பத்தின் மீது அதாவது கலசத்தின் மீது சாற்றுங்கள். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது விசேஷம். தனம், தானியம் முதலான ஐஸ்வரியங்களை பெருக்கும். சுபிட்சத்தைத் தந்தருளும். 108 போற்றிகளைச் சொல்லி, மகாலட்சுமித் தாயாரை ஆராதனை செய்யுங்கள். ‘தாயே, எங்கள் வீட்டில் எல்லா செல்வங்களையும் தந்து, எங்களை இன்னல்களில் இருந்து காத்தருளம்மா’ என்று மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.
அடுத்து, பூஜையை நிறைவு செய்யும் தருணம்.
உங்கள் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு பிரசாதங்களை வழங்குங்கள். பிரசாதம் கொடுத்துவிட்டு, அவர்களை நமஸ்கரியுங்கள். பிறகு, நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ளுங்கள்.
வரலட்சுமி பூஜையின் போது, மகாலட்சுமியின் பேரருளைப் பெறுவதற்கு ஏராளமான மந்திரங்களும் ஸ்தோத்திரங்களும் ஸ்லோகங்களும் இருக்கின்றன. முக்கியமாக, லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் சொல்வது மிக மிக நல்லது. வாழ்வில் நல்லதையெல்லாம் தந்தருளும்.
வரம் தரும் வரலக்ஷ்மி விரதத்தை ஆத்மார்த்தமாகச் செய்யுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவாள் அன்னை மகாலக்ஷ்மி!
No comments:
Post a Comment