ஆக., 1க்கு பின் அமலாகும் புதிய தளர்வுகள் என்ன? மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
Updated : ஜூலை 27, 2020 00:25 | Added : ஜூலை 26, 2020 22:51
புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், நடைமுறையில் உள்ள ஊரடங்கு, வரும், 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போதைய நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதும், மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வின், இரண்டாம் கட்டம், 31ம் தேதியுடன் முடிய உள்ளது.
இழப்பு
பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில், ஊரடங்கு தளர்வின் மூன்றாம் கட்டத்தில், மேலும் பல தளர்வுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து, அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன. மாநில அரசுகளுடனும், மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது.
தற்போதைய நிலையில், தியேட்டர்கள், 'ஜிம்' எனப்படும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்பது தெரிகிறது. நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வருவதால், தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
தியேட்டர்களில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிப்பதாக, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், '25 சதவீத இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கலாம்' என, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஜிம்களையும் திறக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பள்ளிகள் திறப்பா?
அதே நேரத்தில், பள்ளி, கல்லுாரிகள் திறப்பு தற்போதைக்கு இருக்காது. பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் சஷாங்க் கேட்டுள்ளார். மாநில அரசுகளும், பெற்றோர்களின் கருத்தைக் கேட்டுள்ளன. அதனால், இந்த ஊரடங்கு தளர்வு மூன்றாம் கட்டத்தில், பள்ளி, கல்லுாரி உள்பட கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாது என்பது உறுதியாக உள்ளது.
மெட்ரோ ரயில் சேவையும் இருக்காது. ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படாது என, தெரிய வருகிறது. அதே நேரத்தில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
மோடி கூட்டத்தில் மம்தா
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் பல முறை பேசியுள்ளார். ஆனால், இந்தக் கூட்டங்களில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், நொய்டா, கோல்கட்டா மற்றும் மும்பையில் புதிய பரிசோதனை மையங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், இந்த மையங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத், மஹாராஷ்டிர முதல்வர், உத்தவ் தாக்கரே பங்கேற்கின்றனர். மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment