Wednesday, July 29, 2020

திருவாரூர்: `மாற்றுவழி இருந்தும், வீடுகளை இடிக்கப்போறாங்க!’ - கிராம மக்கள் கண்ணீர்


திருவாரூர்: `மாற்றுவழி இருந்தும், வீடுகளை இடிக்கப்போறாங்க!’ - கிராம மக்கள் கண்ணீர்


முடிக்கொண்டான் கிராமம்

இது எல்லாமே பட்டா நிலம். எங்களுக்குச் சொந்தமான இடத்துக்குள்ளார தான் வீடுகளைக் கட்டியிருக்கோம். கொஞ்சம் கூட அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கலை. சாலை விரிவாக்கத்துக்காக, இங்கவுள்ள வீடுகளோட, முன் பகுதியை லேசா இடிச்சாலே ஒட்டு மொத்த வீடுகளும் சேதமாயிடும்.

தங்களுக்கு உரிமையுள்ள பட்டா நிலத்தில், கடன்கள் வாங்கி, கடும் சவால்களைச் சந்தித்து கட்டிய வீடுகளை, திடீரென ஒருநாள் இழக்க நேரிட்டால், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ரணம்... அது வேதனையின் உச்சமல்லவா. அதுவும் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு இப்படி ஒரு நிலையென்றால், இவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதே பெரும் போராட்டம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா, முடிக்கொண்டான் கிராமத்தின் வழியே நடைபெறும் சாலை விரிவாக்கத்தினால், இங்குள்ள 70 வீடுகள், கடைகள், பள்ளிக்கூடம், கோயில் உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட உள்ளதாகவும் இதற்கு மாற்றுவழி இருந்தும் கூட, அதிகாரிகள், கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்துகொள்வதாகவும் இங்குள்ள மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ரவிச்சந்திரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி மக்கள், ``சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையை அகலப்படுத்துறாங்க. இதுல எங்க ஊர் பகுதியில் போகக்கூடிய சாலையை, 8 மீட்டர்ல இருந்து 16 மீட்டராக விரிவுப்படுத்தப் போறாங்க. இதனால் இந்த சாலைக்கு இரண்டு பக்கமும் உள்ள வீடுகள்ல ஒரு குறிப்பிட்ட பகுதியை இடிச்சி அப்புறப்படுத்தப் போறாங்க. இது எல்லாமே பட்டா நிலம்.

எங்களுக்கு சொந்தமான இடத்துக்குள்ளாரதான் வீடுகளை கட்டியிருக்கோம். கொஞ்சம்கூட அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கலை. இங்க 70 வீடுகள் இருக்கு. இது எல்லாமே, அதிகபட்சம் 3 - 4 செண்ட் இடத்துக்குள்ளாரதான் அமைஞ்சிருக்கு. சாலை விரிவாக்கத்துக்காக, இங்கவுள்ள வீடுகளோட, முன் பகுதியை லேசா இடிச்சாலே ஒட்டு மொத்த வீடுகளும் சேதமாயிடும். இங்க வசிக்ககூடிய மக்கள் எல்லாருமே ஏழை, நடுத்தர குடும்பங்கள்” என வேதனையோடு தெரிவித்தார்கள்.

இரும்புக்கடையில் தினக்கூலியாகப் பணியாற்றும் ரவிச்சந்திரன் மிகுந்த கண்ணீரோடு, ``அன்றாட பொழப்புக்கே நாங்க திண்டாடிக்கிட்டு இருக்கோம். எங்களோட வீடு இடிக்கப்பட்டால், எங்களோட வாழ்க்கையே முடிஞ்சிப்போயிடும். இதுல இருந்து நாங்க மீண்டு வரவே முடியாது. மொத்தமே மூணு செண்ட்ல என்னோட வீடே இருக்கு. இதுல ஒன்றரை செண்ட் இடிப்பட போகுது. அதுக்கு பிறகு நாங்க இங்க வாழ முடியுமா. இந்தப் பகுதியில் ஒரு சென்ட் இடத்தின் சந்தை மதிப்பு 3 லட்சம் ரூபாய். ஆனால், இதுக்கு அரசாங்கம் கொடுக்கக்கூடிய இழப்பீடு, அதிகபட்சம் வெறும் 20,000 ரூபாய்தான். இதை வச்சி நாங்க எப்படி மாற்று இடம் தேட முடியும்” என மனம் நொந்துப் பேசினார்.

சுகுமார்

இவரை போல் இன்னும் பலர் கண்ணீருடன் கதறினார்கள். இப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சுகுமார் ``சாலை விரிவாக்கம் தொடர்பாக, 2016-ம் வருசம் முதல் முதலாக, இங்க சமூக ஆய்வுக்கூட்டம் நடந்தப்பவே, இங்கவுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சோம். இங்கவுள்ள 70 வீடுகள், கடைகள், பள்ளிக்கூடம் பாதிக்கப்படுறதுனால, இதற்கு மாற்றாக, புறவழிச்சாலை அமைக்கலாம்னு யோசனை தெரிவிச்சோம். நாங்க சொல்லக்கூடிய பகுதியின் வழியாகப் புறவழிச்சாலை அமைத்தால், பயண தூரமும் ஒன்றரை கிலோமீட்டர் குறையும். சாலை விரிவாக்கத்துக்கான செலவும் பல மடங்கு குறையும். நாங்கள் சொல்லும் புறவழிச்சாலைக்கான பகுதியில, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம்தான் அதிகம். ஒரு சிலருக்கு சொந்தமான நிலத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் இதுக்கு பயன்படுத்தினால் போதும்.

அவங்களும் முழுமனதோடு ஒத்துக்கிட்டு, கடிதமாகவே எழுதியும் கொடுத்துட்டாங்க. ஊருக்குள் சாலையை அகலப்படுத்துவதால் 70 வீடுகள் பாதிக்கப்படுவதைவிட, தங்களது நிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் இழக்குறது, ஒரு பெரிய பாதிப்பே இல்லைனு, அதிகாரிகள் முன்னிலையிலேயே சொல்லிட்டாங்க. ஆனாலும், அதிகாரிகள் பிடிவாதமாக இருக்காங்க. நாங்க சொல்வது நல்ல யோசனைனு அவங்க மனசுக்கு தெரியுது. ஆனால், இதை கவுரவ பிரச்னையாக பார்க்குறாங்க. மக்கள் மேல இரக்கமே இல்லை” எனத் தெரிவித்தார்.



முடிக்கொண்டான் கிராமம்

சென்னை - கன்னியாகுமரி தொழிற் தட சாலை திட்டத்தின் கும்பகோணம் கோட்ட பொறியாளரான மகேஷ்வரனிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, ``ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பான திட்ட அறிக்கையை அந்த வங்கிக்கு முன்பே அனுப்பப்பட்டுவிட்டது. முடிக்கொண்டான் மக்கள் சொல்வது போல், மாற்றுவழியை ஏற்படுத்துவது சிரமம். சாலை அகலப்படுத்தும் பணிக்கு, இங்குள்ள வீடுகளின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே எடுக்கப்படுகிறது. ஆனாலும், இங்குள்ள மக்களின் கோரிக்கையை எங்களது உயரதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பினோம். அவர்களும் பரிசீலனை செய்தார்கள். காலம் கடந்துவிட்டதாலும், இங்கு மாற்றம் செய்தால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற பிரச்னை உருவாகும் என சொல்கிறார்கள். இயன்றவை இங்குள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல்தான் சாலை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்கிறோம்” என்றார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் பேசியபோது ``இதுகுறித்து விசாரித்து, ’மக்களின் கோரிக்கை கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...