Friday, July 24, 2020

ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.592 உயர்வு


ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.592 உயர்வு

Added : ஜூலை 23, 2020 22:51

சென்னை : தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 592 ரூபாய் அதிகரித்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, மற்ற முதலீட்டு திட்டங்களை விட, மதிப்புமிகு உலோகமான தங்கம், வெள்ளியில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், எப்போதும் இல்லாத வகையில், அவற்றின் விலை தொடர்ந்து, அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் முதல் முறையாக, நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், சவரன், 38 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அன்று, கிராம் தங்கம், 4,773 ரூபாய்க்கும்; சவரன், 38 ஆயிரத்து, 184 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 63.90 ரூபாயாக இருந்தது. நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 74 ரூபாய் அதிகரித்து, 4,847 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு அதிரடியாக, 592 ரூபாய் உயர்ந்து, 38 ஆயிரத்து, 776 ரூபாயானது.

வெள்ளி விலையும், கிராமுக்கு, 3.50 ரூபாய் உயர்ந்து, 67.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மார்ச், 23ல், கிராம் தங்கம், 3,952 ரூபாய்; சவரன், 31 ஆயிரத்து, 616 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 40.50 ரூபாயாக இருந்தது. அம்மாதம், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு, 24ல் வெளியிடப்பட்டது.இதையடுத்து, மார்ச், 23ல் இருந்து, 122 நாட்களில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 895 ரூபாயும்; சவரனுக்கு, 7,160 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் வெள்ளி விலை, கிராமுக்கு, 26.90 ரூபாய் உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024