Thursday, July 23, 2020

மருத்துவ மேற்படிப்பைக் கவனியுங்கள்


மருத்துவ மேற்படிப்பைக் கவனியுங்கள்

23.07.2020

கொள்ளைநோயின் பரவல் தமிழகத்தை முடக்கியிருக்கும் நிலையில், மருத்துவத் துறையின் செயல்பாடுகள் மட்டுமின்றி மருத்துவப் படிப்புகள் தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளும்கூட உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுவருகின்றன. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்குத் தலா ரூ.325 கோடியை ஒதுக்கியிருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனை என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியம் நிறைவேறப் போகிறது என்ற தமிழக அரசின் பெருமிதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. புதிதாகத் தொடங்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகளால் தமிழகத்தில் தற்போதுள்ள 3,250 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுடன் மேலும் 1,650 இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.

தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவுகளை நிறைவேற்றுவதில் தமிழக முதல்வர் அக்கறை கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கரோனா பரவலின் காரணமாக மாணவர்கள் தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நீட் தேர்வை இந்த ஆண்டு நடத்துவது சரியல்ல என்று பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதே வேகத்தில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% உள் இடஒதுக்கீடு கொடுப்பதற்கு அவசரச் சட்டத்தை இயற்றவும் தமிழக அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்துள்ளார். இது பெற்றோர்களாலும் மாணவர்களாலும் வரவேற்கப்படும் அதே வேளையில், இந்த உள் இடஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானது அல்ல; இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

அதே நேரத்தில், இது குறித்து மருத்துவர்கள் முன்வைத்துவரும் கருத்துகள் அரசின் அறிவிப்புகளை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவப் படிப்புகளில் சேர வேண்டும் என்ற கவலைதான் தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு உண்மையான காரணம் என்றால், மருத்துவப் படிப்பை முடித்து அரசு மருத்துவர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு இந்த அரசு ஊதியத்தை மிகக் குறைவாக நிர்ணயித்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். பணி அனுபவத்துக்கு ஏற்ப அரசு மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியத்தை உரிய காலகட்டத்தில் வழங்க முன்வராத அரசு, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்பது முரணாகவே தோன்றுகிறது என்பது அவர்களது வாதம்.

நீட் பறித்த வாய்ப்பு

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை மீண்டும் பெறுவதற்குத் தமிழக அரசு முயல வேண்டும் என்கிறார், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியான பெருமாள் பிள்ளை. ‘அரசு மருத்துவர்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கே இது அவசியமான நடவடிக்கை. கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் இருந்தன. தமிழ்நாட்டில் இன்று அனைத்து விதமான மருத்துவச் சிகிச்சைப் பிரிவுகளிலும் அரசு மருத்துவர்கள் போதிய அளவில் இருக்கிறார்கள் என்பது, மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு இருந்ததால்தான். மருத்துவ மேற்படிப்புகளுக்குக் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு அந்த வாய்ப்புகளைப் பறித்துவிட்டது’ என்கிறார் பெருமாள் பிள்ளை. மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்காக வீட்டிலிருந்து தயாராகும் ஒரு தனியார் மருத்துவருக்கும் எங்கோ ஒரு குக்கிராமத்தில் மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவருக்கும் இடையிலான போட்டி எப்படிச் சமமானதாக இருக்க முடியும் என்பதுதான், அரசு மருத்துவர்கள் முன்வைக்கும் முக்கியமான கேள்வி. இரவும் பகலும் மருத்துவப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவர்கள், எப்படித் தேர்வுக்கென்று தனியாகத் தயாரிப்பில் ஈடுபட முடியும்? இந்தக் கேள்வி அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிடக்கூடியதல்ல.

இன்றைய கொள்ளைநோய்க் காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் வலுவான உள்கட்டமைப்பே நோய்ப்பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஏறக்குறைய 18,000 அரசு மருத்துவர்கள் இந்தப் பணியில் முன்னணியில் இருக்கிறார்கள். அரசு மருத்துவர்களின் சேவை என்பது கரோனா காலத்தில் மட்டுமில்லை; இதற்கு முன் சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் நிவாரணப் பணிகளில் அரசு மருத்துவர்கள்தான் முன்னணியில் நின்றிருக்கிறார்கள்.

சவால் நிறைந்த பணி

அரசிதழ்ப் பதிவுபெற்ற அலுவலர்களில் கிராமங்களில் பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள் மட்டுமே. பல மருத்துவர்கள் போக்குவரத்து வசதியற்ற இடங்களில் பணிபுரிகிறார்கள். சவால் நிறைந்த அந்தச் சேவையை விரும்பிச் செய்கிறார்கள் என்பதும் முக்கியமானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களுக்கான மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஜெயமோகன் வைரஸ் தொற்றுக்குப் பலியானது நினைவிருக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே மூன்றாவது இடம் பெற்றவர் அவர். மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மலைவாழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு மலைக் கிராமங்களுக்குச் சென்றவர். அரசு மருத்துவர்கள் பலரும் மேற்கொண்டுவரும் கிராமப்புறச் சேவைக்கு மருத்துவர் ஜெயமோகன் ஓர் உதாரணம்.

நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் தமிழக முதல்வர். மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் மட்டுமே அதிக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தகுதிபெற்ற மருத்துவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். ஐந்தரை ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, கிராமப்புறப் பணிகளுக்குச் செல்லும் மருத்துவர்கள் மூன்றாண்டு கால மேற்படிப்பு, மீண்டும் அரசுப் பணி, அதற்குப் பின் மூன்றாண்டு சிறப்பு மருத்துவர் படிப்பு என்று மேற்படிப்புகளும் பணியனுபவமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டின் பலன் இது. அந்த வாய்ப்பை தமிழக அரசு விட்டுக்கொடுக்கக் கூடாது.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024