Tuesday, July 28, 2020

ஓ.பி.சி., ஒதுக்கீட்டுக்கு இயற்றுங்கள் சட்டம்! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


ஓ.பி.சி., ஒதுக்கீட்டுக்கு இயற்றுங்கள் சட்டம்! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜூலை 28, 2020 00:06 | Added : ஜூலை 27, 2020 23:15 |




சென்னை: 'மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடஒதுக்கீடு பெற, சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லை; எத்தனை சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பதை, மூன்று மாதங்களில், மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இடஒதுக்கீடு வழங்கும் முறையை முடிவு செய்ய, மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மருத்துவ கவுன்சில் செயலர்கள் அடங்கிய குழுவையும், உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில், 15 சதவீத இடங்களும், முதுநிலை படிப்புகளில், 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படுகின்றன.


50 சதவீத ஒதுக்கீடு:

இந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தி.க., உள்ளிட்ட கட்சிகளும்; 27 சதவீத ஒதுக்கீடு கோரி, பா.ம.க.,வும் மனுக்கள் தாக்கல் செய்தன.மனுக்கள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.

தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், அ.தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பா.ம.க., சார்பில், வழக்கறிஞர், கே.பாலு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிறப்பு பிளீடர் மனோகரன், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.ராமன் ஆஜராகினர்.

27 சதவீதம்:

இவ்வழக்கில், வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், முதல் பெஞ்ச், நேற்று பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு நிறுவனங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கடிதத்திலும், அது கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஒதுக்கீட்டுக்கு, மருத்துவ கவுன்சில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

எதிர்ப்பு:

இடஒதுக்கீடு தொடர்பாக, 1993ல் இயற்றப்பட்ட சட்டத்தை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் அமல்படுத்தும்படி, தமிழக அரசு கோரியுள்ளது. இதற்கு, மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, குறிப்பிட்ட அளவில் ஒதுக்கீடு அமல்படுத்தும் வகையிலான திட்டத்தை வகுத்திருப்பதாக, பதில் மனுவில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற நிபந்தனையுடன், இதில் உள்ளடங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டிலும் இடையூறு இல்லாத வகையில், அமல்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது. அதற்கேற்ப, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இடஒதுக்கீடு கோரும் சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகவும், ஏற்கனவே இடஒதுக்கீட்டை, தமிழகத்தில் பின்பற்றி வருவதாகவும், மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களின் விகிதத்தையும், அதில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருவதையும், கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தின் அடிப்படையிலும், மத்திய அரசு அளித்த திட்டத்தின் அடிப்படையிலும் பார்க்கும் போது, எத்தனை சதவீதம் ஒதுக்கீடு என்பதில், பிரச்னை இருப்பதாக தெரிகிறது. எனவே, இடஒதுக்கீட்டை நீட்டிப்பது தொடர்பான கொள்கை, தகுதி மதிப்பெண், மாணவர்கள் சேர்க்கை குறித்து, மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் ஆய்வு செய்ய வேண்டும். அதேநேரத்தில், மாநில அரசு ஒரு சட்டம் இயற்றி இருக்கும் போது, அதை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அமல்படுத்த வேண்டும் என்பதையும், புறக்கணித்து விட முடியாது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள திட்டத்தை, தெளிவுப்படுத்த வேண்டும். மனுதாரர்கள் தரப்பில் கோரியுள்ளபடி, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, குழுவுக்கு அனுப்பப்படுகிறது. இதன் முடிவு, எதிர்காலத்தில் தான் அமல்படுத்தப்படும்; இந்த கல்வியாண்டுக்கு அல்ல.

எனவே, தமிழக அரசின் சுகாதார துறை செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் செயலர்கள் அடங்கிய கூட்டத்தை, மத்திய சுகாதார பணிகள் இயக்குனர் வாயிலாக, மத்திய அரசு கூட்ட வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சலுகை வழங்கும் முறையை, இந்தக் கூட்டத்தில் இறுதி செய்ய வேண்டும்.

அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், எத்தனை சதவீதம் இடஒதுக்கீட்டை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அமல்படுத்துவது என்பதை, மூன்று மாதங்களில், மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஒதுக்கீடு எப்படி?

* தமிழகத்தில் மொத்த மருத்துவ இடங்களில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. மீதமுள்ள, 85 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது.

* இந்த, 85 சதவீத இடங்களில், ஆதி திராவிடர்களுக்கு, 18 சதவீதம்; பழங்குடியினருக்கு; 1 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 20 சதவீதம்; முஸ்லிம் உள்ளிட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம் என, பிரிவு வாரியாக, 69 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள், பொது பிரிவிற்கு ஒதுக்கப்படும். ஒவ்வொரு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்கள் தரப்படும்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...