நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
சென்னை 24.07.2020
நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் தடைவிதிக்கக் கோரி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தேதி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக, தமிழக அரசால் மத்திய அரசுக்கு 333.30 ஏக்கர் நிலம் வென்லாக்டவுன்ஸ் மற்றும் புரூக்காம்ப்டன் ஆகிய காப்புக் காடுகளின் பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கப்பட்டது.
காலப்போக்கில் பிலிம்களின் பயன்பாடு குறைந்து டிஜிட்டல் முறை வந்ததால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது. மருத்துவம், அச்சுத்தொழில், கல்வி, ஒலிபரப்பு பாதுகாப்புத் துறைகளுக்கு தேவையான படச்சுருள்களை ஒருங்கிணைந்து தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான்.
இத்தகைய தொழிற்சாலைகள் உலகில் மொத்தம் ஆறு மட்டுமே இருந்த நிலையில் மத்திய அரசின் ஆர்டர் இல்லாத நிலையில் மாநில அரசு மட்டுமே எக்ஸ்ரே பிலிம்களைத் தயாரிக்க ஆர்டர் கொடுத்து ஆதரித்து வந்தது.
அதுவும் கைவிடப்பட்ட நிலையில் 2018-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிகள் மட்டும் நிறுத்தப்பட்டன. இதை அடுத்து அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், “தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் 173.16 ஏக்கர் மட்டுமே உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் 292.17 ஏக்கர் நிலத்தை மீண்டும் எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். நிலத்தை மீண்டும் எடுக்கும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் நடக்கும் அனைத்துப் பணிகளுக்கும் தடைவிதிக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், “நிலம் கொடுக்கப்பட்டு ஊட்டியில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டபட்டுவிட்டது” எனத் தெரிவித்தார்.
அனைத்துப் பணிகளுக்கும் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, ஊட்டியில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான பணிகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனவும், வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment