'தற்கொலைக்கு முயன்ற போலீஸ் பணி நீக்கம் சரியே!'
Added : ஜூலை 16, 2020 22:48
மதுரை : துப்பாக்கியால் சுட்டு, தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரரின் பணி நீக்கத்தை, உயர் நீதிமன்றக் கிளை உறுதி செய்தது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது.இங்கு, மதுரை, 6வது சிறப்பு பட்டாலியன் போலீஸ்காரராக இருந்த காமேஸ்வரன், 25, பாதுகாப்பில் ஈடுபட்டார். இவர், 2016 ஜூன், 9ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, துப்பாக்கியால் தனக்குத் தானே சுட்டு, தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சையில் குணமடைந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காமேஸ்வரனுக்கு காவல் துறை சார்பில் குற்றச்சாட்டு, 'மெமோ' வழங்கப்பட்டது. அதில், 'துப்பாக்கியை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு முயன்றுள்ளீர்கள்.காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில், நன்னடத்தை விதிகளை மீறியுள்ளீர்கள்' என குறிப்பிடப்பட்டது.முடிவில், காமேஸ்வரன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து, காமேஸ்வரன் செய்த மேல்முறையீட்டை ஆயுதப்படை, டி.ஐ.ஜி., 2017ல் நிராகரித்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றக் கிளையில், காமேஸ்வரன் மனு செய்தார்.தனி நீதிபதி, 'மனுதாரர் குடும்ப பிரச்னையால், மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். எதிர்காலத்தில் இதுபோல் ஈடுபட மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. காவல் துறை, ஒழுக்கமிக்க படை. இதில் பணிபுரிய, திடமான மனநிலை வேண்டும். மனுதாரர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிறது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என, 2017ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, காமேஸ்வரன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
No comments:
Post a Comment