Friday, July 3, 2020

கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளரை தனது வாகனத்தில் அனுப்பி கௌரவித்த நகராட்சி ஆணையர்


கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளரை தனது வாகனத்தில் அனுப்பி கௌரவித்த நகராட்சி ஆணையர்


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பணி ஓய்வு பெற்ற நகராட்சி துப்புரவுப் பணியாளரை, தனது வாகனத்தில், வீட்டிற்கு நகராட்சி ஆணையர் ஆர்.லதா அனுப்பி வைத்தார்.

அந்தக் காலத்தில் தெருவில், தண்டோரா போட்டு, அரசு வேலைக்கு அழைப்பார்களாம். காப் பணம் சம்பாதித்தாலும், கவுர்மெண்ட் சம்பளமா இருக்க வேண்டும் எனச் சொல்லுவார்கள். ஆனால், இப்போது, பள்ளிக்கூடத்தில் சேரவே பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. அரசாங்க வேலை என்றால், என்ன படித்து இருந்தாலும் சரி, எத்தனை இலட்சம் தருகிறார்கள் என்று தான் பார்க்க வேண்டிய கட்டாய நிலை ஆகிவிட்டது. அப்படிப்பட்ட இந்தக் காலத்தில், எந்த ஒரு அரசாங்க வேலையாக இருந்தாலும், நல்ல முறையில், எந்தவிதக் கெட்டப்பெயரும் இல்லாமல் பணி ஓய்வு பெறுவது என்பது எல்லாவற்றையும் விடப் பெரும்பாடாக இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான், இந்த கொடூரமான கரோனாக் காலத்தில் கூத்தாநல்லூர் நகராட்சியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி இருவர் பணி ஓய்வு பெற்றனர். அவர்களைப் பாராட்ட, கௌரவப்படுத்த நகராட்சி ஆணையர் ஆர்.லதா நினைத்தார். அதன்படி, துப்புரவு மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில், பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன.

கூத்தாநல்லூர் நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் பணி நிறைவு பிரிவுபசார விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, ஆணையர் ஆர்.லதா தலைமை வகித்தார். மேலாளர் எஸ்.லதா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கி. அருண்குமார் வரவேற்றார். விழாவில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பாராட்டின் நிறைவாக, பணி ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேரையும், தனது வாகனத்தில், ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்து நகராட்சி ஆணையர் ஆர்.லதா மகிழ்ந்தார். இச்சம்பவம், அங்கிருந்த அத்தனை பேரையும் கண் கலங்க வைத்தது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஆர். லதா கூறியது..

வாழ்நாளில் முக்கால் வாசி ஆண்டுகளை, நம்முடன், நம்மூர் மக்களுக்காக 40 ஆண்டுகள் தூய்மைப் பணி செய்து, நகரத்தைச் சுத்தப்படுத்திய அந்த பெரும் மனிதரை, இந்த பணி ஓய்வு பெறும் நாளிலாவது வாகனத்தில் கொண்டு விடலாம் என்றுதான் அப்படிச் செய்தேன் என்றார் பெருமையாக ஆணையர் லதா.

இது குறித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் கூறியது.

கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையருக்குப் பெருந்தன்மையான மனது. ஆமாம், பெண்ணின் குணம் இரக்கமுடையது என்பதை நிரூபித்து விட்டார். இந்த கரோனாக் காலத்தில், எப்படி வேண்டுமானாலும், எதையாவது சொல்லி விழாவை ரத்து செய்தோ, தட்டிக் கழித்தோ இருக்கலாம். ஆனால், விழாவை சிறப்பாக நடத்தியதுடன், தனது காரிலேயே வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னதும், பாராட்டுதலுக்குரியதாகும்.

இதற்கு முன்பு, கரூரில் அந்த மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் என்பவர், மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற, ஊழியரை, தனது காரிலேயே ஏற்றி அமர வைத்து, வீட்டில் கொண்டு போய் தானே விட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024