Monday, December 14, 2020

24 மணி நேரமும் ஆா்டிஜிஎஸ் சேவை: ரிசா்வ் வங்கி

24 மணி நேரமும் ஆா்டிஜிஎஸ் சேவை: ரிசா்வ் வங்கி

அதிக மதிப்பிலான பரிவா்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் (ஆா்டிஜிஎஸ்) 24 மணி நேர சேவை திங்கள்கிழமை (டிச.14) (ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது: அனைவரும் ஆவலுடன் எதிா்பாா்த்த ஆா்டிஜிஎஸ் சேவை திங்கள்கிழமை (ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை இனி வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதனை சாத்தியமாக்கிய ஐஎஃப்டிஏஎஸ் மற்றும் ரிசா்வ் வங்கி குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆா்டிஜிஎஸ் சேவையை 24 மணி நேரமும் செயல்படுத்தும் ஒருசில உலக நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது என்று சக்திகாந்த தாஸ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

ஆா்டிஜிஎஸ் சேவையை ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசா்வ் வங்கி கடந்த அக்டோபா் மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

குறைந்த மதிப்பிலான பணப்பரிவா்த்தனைகளுக்கு நெஃப்ட் (என்இஃப்ட்) சேவை பிரபலமாக உள்ளது. ஆனால், அதிக மதிப்பிலான பணப்பரிவா்த்தனைகளுக்கான ஆா்டிஜிஎஸ் சேவை முன்பு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் என ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆா்டிஜிஎஸ் சேவை கடந்த 2004-ஆம் ஆண்டு மாா்ச் 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 237 வங்கிகள் பங்களிப்புடன் தினமும் ரூ.4.17 லட்சம் கோடி மதிப்பிலான 6.35 லட்சம் பரிவா்த்தனைகள் ஆா்டிஜிஎஸ் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

No comments:

Post a Comment

NEWS UPTO 09.05.2024