2020-12-13@ 11:57:30
கோவை: தமிழகத்தில் 35,244 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2,10,92,515 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. அரிசி ரேஷன் கார்டு, அந்தியோதயா திட்ட கார்டுகள், அனைத்து பொருட்களும் பெரும் வகையிலான ரேஷன் கார்டு, சர்க்கரை கார்டுகள், போலீஸ், வனத்துறை ரேஷன் கார்டுகள் போன்றவை பயன்பாட்டில் இருக்கிறது. இவற்றில் சர்க்கரை ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் விரும்பினால் அரிசி கார்டுகளாக மாற்றம் செய்யலாம் என உணவு பொருட்கள் வழங்கல் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி மாநில அளவில் ரேஷன் கார்டுகள் வகை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. மாநில அளவில் 10,25,565 சர்க்கரை கார்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இவற்றில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4,51,614 சர்க்கரை ரேஷன் கார்டுகள் அரிசி கார்டுகளாக வகை மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டும் இரு மாதங்களுக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் வழங்கல் பிரிவினர் கார்டு வகை மாற்றம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் 20ம் தேதி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் www.tnepds.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து அந்த விபரங்களை பதிவேற்றம் செய்தால் வரும் 20ம் தேதிக்கு பிறகு வகை மாற்றம் செய்ய முடியும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல் அளித்து கார்டு வகை மாற்றம் செய்யலாம் என வழங்கல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மாநில அளவில் 5,73,951 ரேஷன் கார்டுகள் வகை மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகை திட்டங்களை பெற இந்த வகை மாற்றம் உதவியாக இருக்கும். கடந்த காலங்களில் அரிசி கார்டுதாரர்களுக்கு பல்வேறு உதவி தொகைகள், பரிசுகள் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டுதாரர்கள் உதவி திட்டத்தில் பயன்பெற முடியவில்லை. அனைத்து தரப்பினரும் பயன்பெற அ.தி.மு.க. அரசு இப்படி ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. அரசு அறிவிப்பின்படி கார்டு வகை மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் ஏராளமாக குவிந்து வருகிறது.
No comments:
Post a Comment