கவுன்சிலிங்கிற்கு வராதோருக்கு வாய்ப்பு
Added : டிச 03, 2020 23:18
சென்னை:''புரெவி புயலால், மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாத மாணவர்கள், அடுத்த நாள் சேர்க்கையின் போது பங்கேற்கலாம்,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறினார்.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டிஎஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடந்து வருகிறது. பொது பிரிவினருக்கான சேர்க்கைக்கு, நேற்று, 450 மாணவர்கள் அழைக்கப்பட்டதில், 436 பேர் பங்கேற்றனர். அவர்களில், 363 பேர், அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், 51 பேர் சுய நிதி கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர்.அரசு பல் மருத்துவ கல்லுாரியில், நான்கு பேர் பி.டி.எஸ்., இடங்களை பெற்றனர்.
நேற்றைய கவுன்சிலிங்கில் மொத்தம், 418 இடங்கள் நிரம்பின.தற்போது, அரசு கல்லுாரிகளில், 859 எம்.பி.பி.எஸ்., - 146 பி.டி.எஸ்., இடங்கள்; சுய நிதி கல்லுாரிகளில், 945 எம்.பி.பி.எஸ்., - 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்நிலையில், 'புரெவி' புயல் பாதிப்பு உள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறுகையில், ''கவுன்சிலிங்கில் குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்க முடியாத மாணவர்கள், உரிய காரணங்களுடன், அடுத்த நாள் சேர்க்கையில் பங்கேற்கலாம். அதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment