Thursday, July 22, 2021

ஓ.பி.சி., சான்றிதழை தாமதமின்றி வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்



தமிழ்நாடு

ஓ.பி.சி., சான்றிதழை தாமதமின்றி வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

Added : ஜூலை 21, 2021 22:22

சென்னை:இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி சான்றிதழை காலதாமதமின்றி வழங்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலர் கார்த்திக், வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம்:மத்திய அரசு பணி நியமனம்; மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதன்படி, தமிழகத்திற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த, 1993ல் நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2017ல் 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இவர்களுக்கான வருமான வரம்பை கணக்கிடும்போது, ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை சேர்க்கக் கூடாது என்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக, அரசின் கவனத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசின் 27 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.எனவே, மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஜாதி சான்றுகளை, காலதாமதமின்றி வழங்கும்படி, ஜாதி சான்று வழங்கும் அலுவலர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024