மிரட்டும் கேரளா: கொரோனா பரவியது எப்படி?
Updated : ஆக 01, 2021 00:22 | Added : ஜூலை 31, 2021 21:45
கேரளாவில், கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அது, தமிழகத்திலும் தன் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என, மருத்துவர்கள் சிலர் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். அச்சமூட்டும் இந்த விபரம் சரியா என, மருத்துவ துறையின் நோய் தொற்று ஆய்வில், நீண்டகாலமாக ஈடுபட்டு வரும், மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
கேரள மருத்துவ பல்கலையில் இருந்து, பல தரவுகள் கிடைத்துள்ளன. அவற்றை பார்த்தால், கொரோனா முதல் அலையின் போது, கேரளா பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.
மக்கள் நெருக்கம்
காரணம், கேரளாவில் மலைப் பிரதேசம் அதிகம். வீடுகள் நெருக்கமாக இல்லை. அதனால், மக்கள் நெருக்கம் ஒரே இடத்தில் இல்லை. ஓரளவுக்கு பரவிய கொரோனாவை, விரைவிலேயே கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அடுத்தடுத்த அலை பரவலால், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், மக்கள் நெருக்கமாக கூடியது தான். திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர் போன்ற கேரளாவின் பெரிய நகரங்களில், ஏராளமான கல்லுாரிகள் உள்ளன. அங்கு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கின்றனர்; பலர் விடுதிகளில் தங்கி உள்ளனர்.
கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருப்போர், எந்தவிதமான எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருந்துள்ளனர். ஒரு கல்லுாரி மைதானத்தில், மாணவர்கள் நெருக்கமாக அமர்ந்து, கால்பந்து போட்டிகளை ரசித்துள்ளனர். கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான சிலரும், அவர்களுடன் இருந்துள்ளனர். இதுவே, கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம்.
பாதுகாப்பு நடவடிக்கை
அதே நேரத்தில், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவியருக்கு, கொரோனா இரண்டாவது அலை பரவலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இன்னொரு கல்லுாரியில், விடுதிக்கான உணவகத்தில் அமர்ந்து சாப்பிட தடை விதித்து, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றி உள்ளனர். ஆனால், 'மெஸ்'க்கு வந்து சாப்பாடு வாங்கும் மாணவர்கள், விடுதி அறைகளுக்கு சென்று, அங்கே கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
ஒரு சிறிய அறையில், 20 பேர் வரை தங்கி சாப்பிட, ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கும் பரவி விட்டது. இப்படித் தான், கொரோனா பரவல் மாநிலம் முழுதும் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
'மூன்றாவது அலை அச்சம் வேண்டாம்'
''ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில், மூன்றாவது அலை இருக்கும் என்று கூறுகின்றனர்;அதை புறக்கணிக்க முடியாது. எத்தனை அலை வந்தாலும், எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலையில், இளைஞர்களும், குழந்தைகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அது பொதுவாக தான் இருந்தது.
கேரளாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இருந்தபோதும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதனால், பெரிய அளவில் அச்சம் வேண்டாம். மூன்றாவது அலையும் அப்படி தான் இருக்கும் என்பது தற்போதைய கணிப்பு.
டாக்டர் தீபக் கண்ணன்
நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர்
'-கேரளாவுக்கு செல்வதை கட்டுப்படுத்த வேண்டும்'
கொரோனா மூன்றாவது அலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. 'டெல்டா பிளஸ்' உருமாற்ற வைரசாக இருக்குமானால், அதிக வீரியத்துடன், அதன் தாக்கம் இருக்கும். அதனால், நாம் கவனமாக இருப்பது நல்லது.
இருப்பினும், மூன்றாவது அலை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர். ஆனால், கொரோனா வைரசை பொறுத்தவரை, எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கேரளாவில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. அதனால், கேரளாவுக்கு போவதையும் வருவதையும் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும்.
டாக்டர் ஜி.வேல்குமார்
நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர்,
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை
- நமது நிருபர் -
No comments:
Post a Comment