எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் வாசிப்பை நேசிப்பவர்களில் கமல் சார் முக்கியமானவர். அவரது அன்றாட வாழ்க்கையில் புத்தகங்களின் பங்கு மிக அதிகம்" என்று அவர் பர்சனல் பக்கங்களை அடுக்குகிறார் நிகில். இனி அவர் சொன்ன தகவல்கள், நம் மொழி நடையில்...
காலையில் அலுவலகம் வந்தவுடன், மீட்டிங் இருந்தால் அனைத்தையும் முடித்துவிட்டு எழுத உட்கார்ந்து விடுவார். படத்துக்கான கதை, திரைக்கதை அல்லது கவிதைகள் என எழுத ஆரம்பித்துவிடுவார். அவரைச் சந்திக்க வருபவர்களில் பலரும் புத்தகங்கள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். தான் படிக்காத புதிய புத்தகத்தை யாராவது கொடுத்தால், அதை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவது கமலின் பழக்கம்.
அதேபோல், தன்னைச் சந்திக்க வருபவர்கள் "இந்தப் புத்தகம் படித்தேன். நன்றாக இருந்தது" என்று போகிற போக்கில் சொன்னால்கூட அதை கவனித்து, தனது உதவியாளர்கள் யாரிடமாவது அந்தப் புத்தகத்தை வாங்கி வரச் சொல்லி படித்துவிடுவார்.
ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, அந்த எழுத்து பிடித்துவிட்டால், தவறாமல் எழுத்தாளரை போனில் அழைத்து நீண்ட நேரம் பேசுவார். அந்தப் புத்தகத்தில் தன்னை ஈர்த்த அம்சங்களையும் வரிகளையும் சுவையுடன் பகிர்வார். சமீபத்தில் அப்படித்தான் 'கொற்றவை' புத்தகத்தைப் படித்துவிட்டு, எழுத்தாளர் ஜெயமோகனிடம் நீண்ட நேரம் பேசினார்.
அத்துடன், அவரை அலுவலகத்துக்கு அழைத்து நீண்ட நேரம் பேசியவர், 'பாபநாசம்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்துவிட்டார் கமல். 'இவரால் முடியும்' என்று முடிவு செய்துவிட்டால், உடனே அவர்களைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள தயங்குவதில்லை. அதுதான் கமல்ஹாசன்.
கமலும் ரஜினியும்
"நண்பர், நல்ல மனிதர், உண்மையிலேயே சகலகலா வல்லவர். அவர் நடிப்பது, பாடுவது, பாடல் எழுதுவது என கை வைக்காத கலையே கிடையாது" என்று 'கமல் 50' விழாவில் பேசினார் ரஜினிகாந்த். அதற்கு, "எங்குளுக்கு முந்தைய காலகட்டத்தில், எங்கள் இருவரையும் போல யாரும் நட்பு பாராட்டியதில்லை. சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பட்டங்கள் எல்லாம் நீங்கள் கொடுத்ததுதான். எங்களுக்கு தெரியும் நாங்கள் யார் என்று. நாங்கள் திரையுலகுக்கு வந்த வேலை மட்டும் இன்னும் முடியவில்லை என்று எங்களுக்கு தெரியும்" என்று அவ்விழாவில் கமல் கூறினார்.
உண்மையில், இருவருக்கும் இடையேயான நட்பு என்பது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியேதான் இன்னும் நீடிக்கிறது. அவ்வப்போது இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொள்வார்கள்.
'தசாவதாரம்' படத்துக்காக பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமெரிக்க அதிபர் அலுவலகம் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அப்போது, கமலைப் பார்க்க வேண்டும் என்று திடீரென படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டார் ரஜினி. அங்கு கமலோ ஜார்ஜ் புஷ் மாதிரியான வேடத்தில் இருந்ததைப் பார்த்து, ரொம்ப குஷியாகி பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
"சூப்பர் கமல். அற்புதம். இந்த மாதிரி எல்லாம் உங்களால் மட்டுமே பண்ண முடியும்" என்று கூறிவிட்டு, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கமல் ஆகியோருடன் ஒரு மணி நேரம் இருந்து பேசிவிட்டு படப்பிடிப்பைப் பார்த்து ரசித்த பிறகே கிளம்பினார்.
'மன்மதன் அம்பு' படத்துகாக சிறப்புத் திரையிடல் காட்சிக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் கமல். ரஜினியும் வந்திருந்தார். அப்போது ரஜினி வழக்கம்போல அல்லாமல் வித்தியாசமாக உடை அணிந்து வந்திருந்தார். ஏன் இந்த மாற்றம் என்று ரஜினியின் உதவியாளிடம் நிகில் விசாரித்திருக்கிறார். அப்போது "நீங்க வேற... ரஜினி சார் காலையில இருந்து நிறைய டிரெஸ்ஸை மாத்தி மாத்தி போட்டுப் பார்த்தார். இந்த டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு 'நல்லாயிருக்க இல்லையா?'ன்னு கேட்டு கன்பார்ம் பண்ணிட்டுதான் கிளம்பினார்" என்றாராம் ரஜினியின் உதவியாளர்.
அப்போது, கமல்ஹாசனைப் பார்க்கச் செல்லும்போது உடையில் ஏன் இந்த மெனக்கெடல் என்பதற்கான காரணத்தையும் காரில் செல்லும்போது ரஜினி சொல்லியிருக்கிறார்.
"கமலைப் பார்க்க போகிறோம் இல்லையா... ஸ்மார்ட்டாக போக வேண்டுமே!"
கமல் எந்த அளவுக்கு தனக்கு ஸ்பெஷல் என்பது ரஜினியின் இந்த ஸ்டேட்மென்ட் ஒன்றே சான்று.
*
ரஜினி, கமல் உடன் நிகில்
நான் வியந்த தருணம்:
"நான் படித்தது 8-ம் வகுப்பு வரைக்கும்தான். நான் கற்றுக்கொண்ட அனைத்துமே என்னுடைய அனுபவ அறிவில் இருந்துதான்" என்று சமீபத்தில் நடைபெற்ற 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டில் கமல் சார் பேசினார். திரையுலக அனுபவம், இலக்கிய அனுபவம், இசை அனுபவம் முதலான கலை சார்ந்த விஷயங்களைத்தான் அவர் குறிப்பிட்டார் என்று நாம் நினைத்தால் அது தவறு.
என் மூத்த மகன் அகில் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். அகில் 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியபோது, அவருக்கு போன் செய்து கமல் சார் வாழ்த்தினார். அப்போது "பிளஸ் டூ முடிச்சுட்டு என்ன படிக்க ஆர்வம்?" என்று கேட்டிருக்கிறார். "நான் மெடிக்கல் படிக்கலாம்னு இருக்கிறேன்" என்றான் அகில்.
"மெடிக்கல்ல...?" - இது கமல் சார்.
"நியூரோலாஜி அங்கிள்."
அதைக் கேட்டதும், நியூரோலாஜியில் உள்ள ஒரு பிரிவு ஒன்றைக் குறிப்பிட்டு, "இதைப் படி.. நல்ல எதிர்காலம் இருக்கு" என்று சொன்னார் கமல் சார்.
இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரிவு எந்தக் கல்லூரியில் இருக்கிறது? எவ்வளவு செலவாகும்? என்ற விவரங்களை எனக்குத் தெரிந்த நியூரோ மருத்துவரிடம் விசாரித்தேன்.
குறிப்பிட்ட நியூரோ படிப்பு பிரிவைப் பற்றி கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த நியூரோ மருத்துவர், "இந்தப் படிப்பு அமெரிக்காவில் புதிதாக அறிமுகப்படுத்தி வெறும் ரெண்டு மாசம்தான் ஆகுது. இந்தியாவுக்கே இந்தப் படிப்பு இன்னும் அறிமுகம் இல்லை. இந்தப் படிப்பைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார்?" என்றார்.
"கமல் சார்" என்று பதில் சொன்னதும் வியந்தது அந்த நியூரோ மருத்துவர் மட்டுமல்ல... நானும்தான்" - நிகில்
*
கமலின் ஃபிட்னஸ் ரகசியங்கள்... அடுத்த அத்தியாயத்தில்!
கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு esakkimuthu.k@thehindutamil.co.in