தினமும், ஐந்து கோடி ரூபாய் நஷ்டத்தில், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படு கின்றன. இதை ஈடுகட்டும் வகையில், சிக்கன நடவடிக்கையாக, வருவாய் இல்லாத வழித் தடங்களில் இயக்கப்படும், 2,200 பஸ்களை, இன்று முதல் படிப்படியாக நிறுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு போக்குவரத்து கழகம், எட்டு கோட்டங்களாகவும், 22 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சார்பில், தினமும், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடைசியாக, 2011ல், டிக்கெட் கட்டணம், 40 சதவீதம் உயர்த்தப் பட்டது.
சிக்கன நடவடிக்கை
ஆனாலும், போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. தற்போது, 1 கி.மீ.,க்கு, ஐந்து ரூபாய் வீதம்,
தினமும் இயக்கப்படும், 1 கோடி கி.மீ.,க்கு, ஐந்து கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. டீசல் மீதான வாட் வரி உயர்வால், ஓய்வூதியம் கூட கொடுக்க முடியாத நிலைக்கு போக்கு வரத்து கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன.அதனால், சிக்கன நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து கழகங்கள் முன்வந்துள்ளன.
இதன்படி, போதுமான வருவாய் இல்லாத வழித்தடங்களில், ஒருமண்டலத்திற்கு சராசரி யாக, 100 பஸ்கள் வீதம், தமிழகம் முழுவதும் உள்ள, 22 மண்டலங்களில், 2,200 பஸ்களின் இயக்கத்தை, இன்று முதல் படிப்படியாக நிறுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
டவுன் பஸ்கள்
இது குறித்து, தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:
மண்டலங்கள் இடையே, ஒருங்கிணைந்த அட்டவணை இல்லாத காரணத்தால், ஒரே நேரத்தில், ஒரு ஊருக்கு, பல பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இதனால், போதுமான பயணிகள் இன்றி, பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப் பட்டு வருகின்றன.இந்த வழித்தடங்களில், பஸ்களை குறைத்தால், நஷ்டம் குறையும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். அதையேற்று, வருவாய் குறைவாக
உள்ள வழித்தடங்களில், பஸ்களை நிறுத்தும் படி, மண்டல மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இதில், டவுன் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. புறநகர் பஸ்களில் மட்டுமே, குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் பஸ்கள் செல்லும் நேரத் திற்கு முன், பின் செல்லும் பஸ்களை ரத்து செய்யக் கூடாது.
இன்று முதல் அமல்
பயணிகளுக்கு பாதிப்பின்றி, 1 கி.மீ.,க்கு, 18 ரூபாய்க்கு வசூல் குறைவாக உள்ள பஸ்களை நிறுத்த வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இன்று முதல் படிப்படியாக
அமல்படுத்தப்படுகிறது. மேலும், இரண்டு பஸ்களுக்கு மேல் ஒரே நேரத்தில், ஒரு ஊருக்கு காத்திருக்கும் போது, ஒரு பஸ்சில் பயணிகளை நிரப்பி அனுப்பும் நடவடிக்கை யில், அதிகாரிகள் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, வருவாய் குறைந்து விட்டது என, டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு, 'மெமோ' கொடுக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -