தீருமா தெரு விலங்குகள் பிரச்னை?
By சுப. உதயகுமாரன் | Published on : 07th October 2017 01:07 AM
அன்பும், அரவணைப்புமின்றி ஏராளமான நாய்கள், பூனைகள், பன்றிகள், கழுதைகள், மாடுகள் போன்ற விலங்குகள் தெரு விலங்குகளாக அலைந்து திரிகின்றன. தேவையில்லா விலங்குகளை கொண்டுபோய் ஒப்படைப்பதற்கு சரணாலயங்கள் ஏதும் இங்கே இல்லை.
கைவிடப்பட்ட ஆதரவற்ற விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பும், வசதியும், பொருளாதார பலமும், மனப்பக்குவமும் நம்மில் பலருக்கும் இல்லை என்பதும் உண்மை.
இதன் விளைவாக, தெரு விலங்குகள் பெரும் பிரச்னையாக மாறிவிட்டிருக்கின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், சென்னையிலிருந்து பேருந்தில் வந்திறங்கி அதிகாலை நேரத்தில் திருநெல்வேலியில் வசித்த என் தங்கையின் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில் என் பின்னால் சுமார் இருபது தெரு நாய்கள் பலமாக குரைத்தவாறே பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.
ஓடித் தப்பிக்க முயற்சி செய்தால் பிரச்னை விபரீதமாகிவிடும் என்பது எனக்குத் தெரியும். இமையமலைப் பயணம் ஒன்றின்போது தன்னைத் துரத்தியக் குரங்குகளை எதிர்த்துநின்று விரட்டிய சுவாமி விவேகானந்தரின் அனுபவம்தான் என் நினைவுக்கு வந்தது.
ஆனால் நான் சுவாமி விவேகானந்தர் அல்ல; அவரது துணிச்சலும், சாதுரியமும் எனக்கு இருக்கவில்லை. நான் ஓடவுமில்லை, நிற்கவுமில்லை, கையிலிருந்த பையை மட்டும் கால்களைச் சுற்றி சுழற்றியவாறு எந்தவொரு நான்குகால் தோழரும் வந்து என் கால்களைக் கவ்விவிடாதபடிக் காத்துக்கொண்டு மெதுவாக நடந்து சென்று தப்பித்தேன்.
என்னைக் கலவரமடையச் செய்த அந்த அனுபவம், இப்போதும் எந்த ஊருக்குச் சென்றாலும் தெரு விலங்குப் பிரச்னையை நினைவூட்டுகிறது.
சில மாதங்களுக்கு முன்னால் மேதா பட்கர், கவிதா கிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்களோடு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்குச் சென்றபோது, ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் அந்தக் கடும் குளிரிலும் ஆங்காங்கே அலைந்து திரிவதையும், படுத்துக்கிடப்பதையும் கண்ணுற்றேன்.
இது ஒரு பெரும் பிரச்னையாக இருப்பதாகவும், உள்ளாட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உள்ளூர் மக்கள் குறைபட்டுக் கொண்டனர்.
தெரு நாய்களைவிட, தெருப் பூனைகளைவிட பெரும் பிரச்னையாக இருப்பவை பன்றிகளும், மாடுகளும்தான். பன்றிகள் பொது சுகாதாரத்துக்குப் பெரும் கேடு விளைவித்து, நோய்களைப் பரப்புகின்றன.
பன்றிகளை வளர்ப்பவர்கள் ஒரு வளாகத்தில் விட்டு, உரிய உணவு கொடுத்து முறைப்படி வளர்ப்பதற்கு பதிலாக, பொது இடங்களில், சாக்கடை பகுதிகளில், நீர்நிலை ஓரங்களில் மேயவிட்டு, எந்தச் செலவுமில்லாமல் வளர்த்தெடுக்கிறார்கள்.
அந்தப் பன்றிகளுக்கும் ஓரளவு எடை கூடியதும் அவற்றை பெரும் லாபத்துக்கு விற்றுவிடுகிறார்கள். மிகக் குறைந்த முதலீட்டில், பொதுமக்கள் செலவில், பெரும் லாபம் சம்பாதிக்கும் தொழிலாக இந்த பன்றி வளர்ப்புத் தொழில் இருக்கிறது.
இதுபோலவே நாடெங்கும் மாடுகளும் வளர்க்கப்படுகின்றன. மாடுகளை விலைக்கு வாங்கி நகர்ப்புறங்களில், சாலைகளில் விட்டு விடுகிறார்கள். அவை செடி கொடிகள், குப்பைக் கூளங்கள், சுவரொட்டிகள் என கிடைப்பதைத் தின்று, சாக்கடைத் தண்ணீரைப் பருகி, சாலைகளில் படுத்துறங்கி வாழ்கின்றன.
இவற்றின் உரிமையாளர்கள் பாலைக் கறந்தெடுக்கும் வேலையையும், தெருவில் திரியும் மாடுகளை யாரும் ஓட்டிச் செல்லாமல் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் வேலையையும் மட்டுமே செய்கிறார்கள்.
பழைய காலங்களில் தங்கள் வயல்களில் இறங்கி மேய்ந்து பயிர்களை பாழ்படுத்தும் தெரு மாடுகளைப் பிடித்து வயலுக்கு சொந்தக்காரர்கள் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திய 'பவுண்டு'களில் கட்டிப்போட்டு விடுவார்கள். மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பல இடங்களிலும் தேடுவார்கள்.
இறுதியில் அவை பவுண்டில் அடைக்கப்பட்டிருப்பதை அறிந்து அங்கு சென்று உரிய தண்டனைத் தொகையைக் கட்டி மாடுகளை மீட்டுச் செல்வார்கள். இப்போது அந்த அமைப்பே இல்லை. தூத்துக்குடியிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி கிழக்குக் கடற்கரை சாலையில் பயணம் செய்தால் ஆயிரக்கணக்கான தெருமாடுகளை நாம் பார்க்க முடிகிறது.
இந்தத் தெரு விலங்குகளால் பெரும் அவலங்கள் நிகழ்கின்றன. பன்றிகள், மாடுகளால் பயங்கரமான சாலை விபத்துகள், உயிரிழப்புகள் நடக்கின்றன. தெரு நாய்கள் கடித்து சிறு குழந்தைகள் பலியாவது, வெறிநோய் பரவுவது என பெரும் பிரச்னைகள் எழுகின்றன.
பாதிப்புகளுக்குள்ளாகும் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிப்பது, அவற்றுக்கான மருந்துகள், பொருட்கள் வாங்குவது என ஏராளமானப் பொருட்செலவும் அரசுக்கு உருவாகிறது.
இந்தத் தெரு விலங்குப் பிரச்னையை எப்படி மேலாண்மை செய்வது? பொது இடங்களில் மாடுகள், பன்றிகள், கழுதைகள் திரியும் வழக்கத்தை முற்றிலுமாகத் தடை செய்தாக வேண்டும்.
ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் இந்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் பொது இடங்களில் மாடுகள், பன்றிகள், கழுதைகள் நடமாடிக் கொண்டிருந்தால், அவற்றை வளர்ப்பவர்களுக்கு பெருந்தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். மேலும், அந்த விலங்குகளை பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விட வேண்டும்.
நமது நாட்டில் எலிகள், பெருச்சாளிகள் அதிகமான எண்ணிக்கையில் வாழ்வதால், இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க தெருப் பூனைகள் ஓரளவு உதவுகின்றன. பூனைக்கடி, வெறிநோய் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், தெரு நாய்கள் போன்ற பெரும் நெருக்கடி பூனைகளால் எழுவதில்லை.
தெரு நாய்களை எப்படிக் கையாள்வது என்பதுதான் ஒரு பெரும் தேசியப் பிரச்னையாக முகிழ்த்து நிற்கிறது. தெரு நாய்களைப் பொருத்தவரை, நமக்கு மூன்று தெரிவுகள் உள்ளன. ஒன்று, சரணாலயங்கள் அமைத்து அவற்றைப் பராமரிப்பது.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 50 கோடி நாய்கள் வாழ்கின்றன என்றும், அவற்றுள் 80 விழுக்காடு தெரு நாய்களாக அலைந்து திரிகின்றன என்றும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
அப்படியானால், இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நாய்களை எப்படி சரணாலயங்களில் வைத்துப் பாதுகாக்க முடியும்? அவற்றுக்குத் தேவையான இடம், உணவு, மருந்து, மருத்துவர்கள், பராமரிப்பு போன்றவற்றை எப்படி உருவாக்க முடியும்? இது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.
இரண்டாவது தெரிவு, தெரு நாய்களைக் கொன்றொழிப்பது. முன்பெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களை கண்ணிவைத்துப் பிடித்து, வண்டிகளில் ஏற்றிச்சென்று, அடித்துக் கொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தன.
அது முற்றிலும் தவறான, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கொடூரச் செயல். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்லவே? நாய்களுக்கும் பிற விலங்குகளுக்கும் வாழும் உரிமை இருக்கிறதே?
ஆடு, மாடுகளை உணவாகக் கொள்வதுபோல, நாய்களைப் பிடித்து வடகிழக்கு மாநிலங்களுக்கு உணவாக அனுப்பலாம் என்று சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். சைவ உணவுக்காரர்களான என் போன்றோருக்கு அதுவும் ஏற்புடையது அல்ல.
மிருகங்களை கடவுள்களின் வாகனங்களாகவும், தெய்வங்களாகவும் வழிபடுகிறவர்கள் பரவலான மிருகக் கொலையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மூன்றாவது தெரிவு, தெரு நாய்களுக்கு இனவிருத்திக் கட்டுப்பாடு சிகிச்சை அளித்து, வெறிநோய் தடுப்பூசி போட்டு அவற்றை அப்படியே தெருக்களில் மீண்டும் விட்டுவிடுவது.
இந்தத் தெரிவு தெருநாய் பிரச்னையை உடனடியாகத் தீர்த்துவிடாது என்றாலும், அதன் வீரியத்தைக் கொஞ்சம் தணித்து, நாளடைவில் பிரச்னையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும். இந்தத் தீர்வுதான் இப்போதைக்கு சரியானதும், சட்டரீதியானதுமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
தெரு விலங்குகளை சாதாரண மக்கள் தத்தெடுத்து வளர்ப்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக இருக்க வேண்டும். தனக்கேச் சோறு இல்லாத ஒரு குடும்பம், தெரு விலங்குகளை தத்தெடுக்க முடியாது.
இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் தெரு விலங்குகளே இல்லாத இந்தியாவை உருவாக்க, மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசுககள் மட்டுமல்லாது, பொதுச் சமூகம், தொண்டு நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.