Saturday, October 7, 2017


5 நாள் பரோலில் சென்னை வந்தார் சசிகலா
By DIN | Published on : 07th October 2017 04:43 AM



பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் இருந்து காரில் சென்னை வந்தார் சசிகலா.

பெங்களூரு சிறையிலிருந்து 7 மாதங்களுக்கு பிறகு, 5 நாள்கள் பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா, வெள்ளிக்கிழமை இரவு கார் மூலம் சென்னை வந்தார். அவருடன் டிடிவி. தினகரன் உடன் வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லத்தில் சசிகலா தங்குகிறார்.

பரோல் காலத்தில் அரசியல்ரீதியான சந்திப்புகளை நடத்தவோ, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதோ கூடாது என சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கணவரை மருத்துவமனையில் சந்திப்பது, இல்லத்துக்கு திரும்புவது ஆகியவற்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமெனவும் பரோல் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் கடந்த பிப். 15-ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரகம்- கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் அக்டோபர் 4-இல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தனது கணவர் நடராஜனைச் சந்திப்பதற்காக சிறையில் இருந்து செல்ல 15 நாள்கள் பரோல் வழங்குமாறு தனது வழக்குரைஞர் மூலம் சிறைக் கண்காணிப்பாளர் எம்.சோமசேகரிடம் சசிகலாஅக். 2-இல் மனு செய்திருந்தார்.

இதையடுத்து, நடராஜனின் உடல்நிலை குறித்து அரசு மருத்துவரின் அதிகாரப்பூர்வ சான்று உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாததால், அந்த மனுவுக்குப் பதிலாக புதிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு சிறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதை தொடர்ந்து, உரிய சான்றுகள், பிரமாணப் பத்திரங்களுடன் புதிய மனு அக். 4-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதை பரிசீலித்த சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகர், சட்டத் துறையின் ஆலோசனை, தமிழக காவல் துறையின் தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு அக். 7 முதல் 11-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் பரோல் அளித்து வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நண்பகல் 2.53 மணிக்கு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அங்கு தயார் நிலையில் காத்திருந்த காரில் ஏறி சென்னைக்குப் பயணமானார். அவரை வரவேற்று, அதிமுக(அம்மா அணி) துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகன் விவேக், அவரது மனைவி கீர்த்தனா உள்ளிட்டோர் அழைத்துச் சென்றனர்.

மேலும், சசிகலாவைக் காண அவரது ஆதரவாளர்களும் சிறைக்கு வெளியே திரண்டிருந்தனர். 

நிபந்தனைகள் என்ன?

* பரோல் காலத்தில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் செல்ல மட்டுமே சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள(சென்னை) இடத்தில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும்.
* மருத்துவமனை அல்லது வீட்டில் எந்தவொரு பார்வையாளரையும் சந்திப்பதை ஊக்குவிக்கக் கூடாது.
* பரோல் காலத்தில் எந்தவித அரசியல் அல்லது இதர பொது செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது அல்லது கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது. காட்சி, அச்சு ஊடகங்களுடன் உரையாடக் கூடாது என்று சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

* சென்னைக்குச் செல்லவும், பெங்களூருக்குத் திரும்பவும் தலா ஒரு நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், அக். 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சசிகலா மீண்டும் சிறையில் சரணடைய வேண்டும் என்று சிறைத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

NewsToday 18.10.2024