Saturday, October 7, 2017

அதிகரிக்கும் 'ஆன்-லைன்' மோசடி: பண்டிகைக் காலம்; மோசடி அமோகம்! எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
பதிவு செய்த நாள்
அக் 07,2017 01:52



கோவை;பண்டிகை காலத்தை பயன்படுத்தி, பொதுமக்களின் வங்கிக் கணக்கில்உள்ள பணத்தை, 'ஆன்-லைன்' மோசடி செய்து அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன; இதுபோன்ற மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க, 'சைபர் க்ரைம்' போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை மாநகரில், கடந்த சில ஆண்டுகளாக, 'ஆன்-லைன்' மோசடிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. நடப்பாண்டு ஒன்பது மாதங்களில், 'ஆன்-லைன்' மோசடி தொடர்பாக, 265க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன.
'ஆன்-லைன்' மோசடி சம்பவங்கள் அதிகரிப்பை தொடர்ந்து, வங்கிளுக்கு, 'சைபர் க்ரைம்' போலீசார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.அதில், 'வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல்போன் எண்களை ரகசியமாக காக்க வேண்டும்; வங்கி, 'சாப்ட்வேரி'ல் நுழைந்து, வாடிக்கையாளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய குறியீடு எண் அனுப்ப முடியாதவாறு, தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளனர்.

'வங்கிகளில் இருந்து பேசுவதாக மொபைல்போன் எண்ணுக்கு யாராவது தொடர்பு கொண்டால், ஒருபோதும் 'ஏ.டி.எம்' மற்றும் 'கிரெடிட்' கார்டு விபரங்களை தெரிவிக்க கூடாது' என, பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.இருந்தும், வாடிக்கையாளர்களிடம் போனில் பேசும் மோசடி நபர்கள், அவர்களிடம் ரகசிய குறியீடு எண்களை பெற்று பணம் எடுக்கும் சம்பவங்கள் குறையவில்லை.
இந்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் போல் பேசி, மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாள்தோறும், பல்லாயிரம் பேருக்கு, இதுபோன்ற மோசடி போன் அழைப்புகள் வந்து கொண்டுள்ளன.'ஆன்-லைன்' மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, 'சைபர் கிரைம்' போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநகர சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது:பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வங்கி கணக்குகளில் அதிகளவு பணம் இருக்கும். அதை அபகரிக்கும் திட்டத்தில், 'ஆன்-லைன்' மோசடிகள் அதிகரிக்கிறது. வங்கிகளில் இருந்து, ஒருபோதும் வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீடு எண்களையோ, ஏ.டி.எம்., பின் எண்களையோ கேட்க மாட்டார்கள்.

இதனால், யாரேனும் போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு, ஏ.டி.எம்., 'கிரெடிட்' கார்டு குறித்து தகவல்களை கேட்டால், சைபர் க்ரைம் போலீசாருக்கும், வங்கிக்கும் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். சந்தேக நபர்கள் குறித்தும் புகார் அளிக்கலாம். வங்கிகளுக்கும் 'ஆன்-லைன்' மோசடி தடுப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஸ்கிம்மர்' இயந்திரம் எச்சரிக்கை!சமீபத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டு ரகசியங்களை 'ஸ்கிம்மர்' இயந்திரத்தை பயன்படுத்தி மோசடி செய்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை 'சைபர் க்ரைம்' போலீசார் கைது செய்தனர். இதேபோன்று பெரிய அளவிலான ஓட்டல்கள், துணி கடைகள், பெட்ரோல் பங்க்குகளில் 'ஸ்கிம்மர்' இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால், இதுபோன்ற இடங்களில் ஊழியர்களிடம் ஏ.டி.எம்., கார்டுகளை கொடுக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024