Friday, October 6, 2017

ஸ்டாலினை அணைத்த அமைச்சர்... கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கலகலத்த ஆளுநர் பதவியேற்பு விழா

எஸ்.மகேஷ்
கே.ஜெரோம்



ஆளுநர் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அரவணைத்துக் கைகுலுக்கிய சம்பவத்தை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் சிரித்துள்ளார். பிறகு இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அடுத்து, அமைச்சர் ஒருவர், ஸ்டாலினை அணைத்தப்படி கைகுலுக்கியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இதுஎல்லாம் நடக்குமா என்று விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க-வினர் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.







அடுத்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி, ஸ்டாலினுக்குப் பின்இருக்கையில் அமர முயற்சிசெய்துள்ளார். அவரை, பின்னால் உள்ள இருக்கையில் அமரும்படி விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அடுத்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், முன் வரிசையில் அமர்ந்ததும், தி.மு.க-வினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து அவரும் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி ஒருவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரை, முன்வரிசையில் அமரும்படி சிக்னல் கொடுக்கப்பட்டது. அப்போது அவர், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருவதுதான் சாலச்சிறந்தது என்று அங்கிருந்து செல்லவில்லை. பதவியேற்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கிய நபரும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் விஜய்கார்த்திக் என்ற ஜெ.எம்.பஷீர் ஆகிய இருவரும் பூங்கொத்து கொடுத்தனர். ஆனால், மக்கள் பிரதிநிதிகளைத் தவிர மற்றவர்கள், ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் மட்டும் எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று மற்றவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024