Friday, October 6, 2017

சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல்! - விமானத்தில் சென்னை வருகிறார்

எஸ்.மகேஷ்




சசிகலாவுக்கு ஐந்து நாள்கள் பரோல் வழங்கி, கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை, விமானம்மூலம் சென்னை வருகிறார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது கணவர் நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலழிந்துவிட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி, நடராசனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. தற்போது, அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவமனையில் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், நடராசனைச் சந்திக்க வேண்டும் என்று சசிகலா, கர்நாடக சிறைத்துறையிடம் அனுமதி கேட்டார். 15 நாள்கள் பரோல் கேட்டு அவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் தொடர்பாக கர்நாடக சிறைத்துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, விண்ணப்பத்தில் சில ஆவணங்கள் இணைக்கப்படாததால், பரோல் நிராகரிக்கப்பட்டது. அடுத்து, புதிய மனுவை சசிகலா நேற்று தாக்கல்செய்தார். சசிகலாவை பரோலில் அனுப்புவது தொடர்பாக, தமிழக காவல்துறைக்கு கர்நாடக சிறைத்துறை மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அதற்கு, இன்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதில், நடராசனின் உடல் நிலை, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகுறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலாவுக்கு பரோல் வழங்க தமிழக காவல்துறையும் கிரீன் சிக்னல் கொடுத்தது. இந்த நிலையில், சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா பரோல் கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டாடினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024