Friday, October 6, 2017

கர்நாடகச் சிறைத்துறை சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல் வழங்க அனுமதித்துள்ளது. அதோடு, கடும் நிபந்தனைகளும் விதித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முதலில் போதிய ஆவணங்கள் இல்லை என்று பரோலை நிராகரித்தது சிறைத்துறை. அடுத்து, புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார். மனுவைப் பரிசீலித்த கர்நாடகச் சிறைத்துறை சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி சசிகலாவை டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் உறவினர்கள் சிறையில் சந்தித்தனர். அப்போது, சசிகலா, நடராசன் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். பரோல் கிடைத்த மகிழ்ச்சி அவர் முகத்தில் இல்லையாம். சோகத்துடனே இருப்பதாக அவரைச் சந்தித்தவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரை வரவேற்கத் தயார்நிலையில் இருக்கிறோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு சசிகலா, சிறையிலிருந்து வெளியில்வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நடராசனை மட்டும் சசிகலா சந்திக்கலாம். அதைத்தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்க வேண்டும் என்றால் சிறைத்துறையின் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக உறவினர்களைக்கூட சசிகலா சந்திக்க வேண்டும் என்றால் அவருடன் வரும் காவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மீடியாக்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது பரோலில் வரும் எல்லோருக்கும் பொதுவானதுதான்" என்றனர்.

சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு 5 நாள் பரோலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல், மீடியாக்கள் போன்ற நடவடிக்கைகளில் பரோலில் வருபவர்கள் ஈடுபடக் கூடாது போன்ற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பரோல் ரத்து செய்யப்படும்" என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024