Saturday, October 7, 2017

அரசு மருத்துவமனைகளில் டாக்டர், நர்ஸ் நியமிக்க ஆய்வு

சேலம்: டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்க ஆய்வு நடந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஒரு வாரத்தில், குழந்தைகள் உட்பட, 15 பேர், டெங்கு காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதி இல்லாமை, சுகாதாரம் மற்றும் நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சேலம் அரசு மருத்துவமனையில், நோய் தடுப்பு நடவடிக்கை பெரும் சவாலாக உள்ளது.

இது குறித்து, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. அதன் எதிரொலியாக, சென்னை, தேசிய ஊரக சுகாதார நல திட்ட இணை இயக்குனர் உமா, சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:

ஆரம்ப சுகாதார நிலையங்களில், டெங்குவை தடுப்பதற்கான களப்பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு, தேவையான டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளனர். அரசு மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்க, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஊரக மருத்துவத் துறை மற்றும் மருத்துவக் கல்வி நிர்வாகத்துடன், தமிழ்நாடு நோய் தடுப்பு கழகமும் இணைந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. 

இதன் மூலம், மருந்து, மாத்திரை உட்பட தேவையான வசதி செய்து கொடுக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகள், காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு, வெளிப்புற நோயாளியாக சிகிச்சை அளிக்கக் கூடாது. உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டும். 

அதை விட, காய்ச்சல் வந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்ற விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை பாயும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024