Saturday, October 7, 2017

தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு 29 இடங்களில் முன்பதிவு 13ம் தேதி முதல் செயல்படும்

சென்னை: ''தீபாவளி சிறப்பு பஸ்களுக்கான, 29 பிரத்யேக முன் பதிவு மையங்கள், 13ம் தேதி முதல் செயல்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளி பஸ்கள் இயக்கம் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்கூறியதாவது: தீபாவளி பண்டிகை, 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக, சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து, 15, 16, 17ம் தேதிகளில், வழக்கமான பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். மூன்று நாட்களில், சென்னையில் இருந்து, மொத்தம், 11 ஆயிரத்து, 645 பஸ்கள்; மற்ற ஊர்களில் இருந்து, 11 ஆயிரத்து, 111 பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் நெரிசலை தவிர்க்க, ஐந்து இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 300 கி.மீ., தொலைவுக்கு அதிகமாக உள்ள ஊர்களுக்கு, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்,www.tnstc.in என்ற இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதற்காக, 13ம் தேதி முதல், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், 26, தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இரண்டு, பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒன்று என, 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படும். தீபாவளி முடிந்து, 19, 20, 21ம் தேதிகளில், சென்னைக்கு, 3,794 சிறப்பு பஸ்களும், மற்ற ஊர்களுக்கு, 7,043 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? : ஆந்திரா செல்லும் பஸ்கள், அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செங்குன்றம் வழியாக செல்லும்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் வரை செல்லும் பஸ்கள், சைதாப்பேட்டை நீதிமன்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்படும்

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்ப கோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும், தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

வேலுார் வழியாக ஆற்காடு, ஆரணி, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் ஓசூர் செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

இந்த ஊர்களுக்கு, 15, 16, 17ம் தேதிகளில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்தவர்கள், அந்தந்த பஸ் நிலையங்களுக்கு சென்று பயணிக்க வேண்டும்

இணைப்பு பஸ்கள் : தீபாவளி சிறப்பு பஸ் நிலையங்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து எந்த ஊருக்கு பஸ்? : மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்துார், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

பெருங்களத்துார் செல்லாது : பஸ்களின் இருக்கைகள் பூர்த்தியானால், தாம்பரம், பெருங்களத்துார் செல்லாமல், மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுப்பாதை வழியாக வண்டலுார் செல்லும். எனவே, பயணியர், பெருங்களத்துாரில் காத்திருக்க வேண்டாம். தாம்பரம், பெருங்களத்துாரில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்த பயணியர், 
ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்று பயணிக்கலாம்.

புகாருக்கு...? : வரும், 15 முதல், 17ம் தேதி வரை, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்லாமல், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார் - - செங்கல்பட்டு வழியாக சென்றால், நெரிசல் இன்றி பயணிக்கலாம்.
பஸ்களின் இயக்கம் குறித்த விபரங்கள் மற்றும் புகார்களுக்கு, 044 -- 2479 4709 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024