Monday, September 10, 2018

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரம்: ‘கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம்’



ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தமிழக முன்னாள் தலைமை குற்றவியல் வக்கீல் பி.குமரேசன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 10, 2018 05:40 AM
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவை நேற்று கூடி தீர்மானம் நிறைவேற்றியது. இதுகுறித்து, தமிழக முன்னாள் தலைமை குற்றவியல் வக்கீல் பி.குமரேசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்ப உள்ளனர்.

முன்பெல்லாம் இதுபோன்ற தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும்போது, அந்த தீர்மான நகலை கவர்னர் மாளிகைக்கு தலைமைச் செயலாளர் நேரடியாக எடுத்துச் சென்று வழங்குவார். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால், ஒரு நொடியில் இ-மெயில் மூலம் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க முடியும்.

தமிழக அமைச்சரவையில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னரிடம் உள்ளது. அதே நேரம், தமிழக அரசின் இந்த தீர்மானத்தை அப்படியே கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பலாம்.

தமிழக அரசு விளக்கம் அளித்த பிறகு, அதை ஏற்றுக்கொள்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம். இவர்கள் அனைவரும் நீண்ட காலம் சிறையில் இருப்பதனால், இவர்களை உண்மையிலேயே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், இந்த விடுதலை நடவடிக்கை அனைத்தையும் 1½ மணி நேரத்தில் முடித்து, விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம்.

இழுத்தடிக்க விரும்பினால், அவரது (கவர்னர்) விருப்பப்படி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024