Tuesday, September 11, 2018

தேசிய செய்திகள்

7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியானது



ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 08, 2018 14:25 PM
புதுடெல்லி

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே அந்த மனுவின் மீதான விசாரணையை முடித்து வைப்பதாகவும் கூறினார்கள்.

அத்துடன், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து, அதை மாநில கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்கள்.

பேரறிவாளன் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் நகல் இன்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதில், பிரிவு 161ஐ பயன்படுத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் சாசனம் 161ன் கீழ் விடுதலை செய்யும்படி மனு அளித்திருந்தார் பேரறிவாளன். அதன்படி, விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு பேரறிவாளன் அளித்த மனு செல்லும் என்றும், மனுவை ஏற்று, தமிழக ஆளுநர் சுதந்திரமாக சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024