Tuesday, September 11, 2018

'வாட்ஸ் ஆப்'ல் மூழ்கிய மணமகள்; திருமணத்தை நிறுத்தினார் மணமகன்

Added : செப் 11, 2018 00:36



லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் 'வாட்ஸ் ஆப்'பே கதி என்று கிடந்த மணமகளை திருமணம் செய்ய மணமகன் மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் நவுகாகான் சதத் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தன் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினருடன் திருமணம் நடக்கும் இடத்தில் மணப்பெண் காத்திருந்தார். ஆனால் மணமகன் வீட்டார் வரவில்லை.

பெண்ணின் தந்தை மணமகன் வீட்டாரை அலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது மணமகன் வீட்டார் 'உங்கள் மகள் வாட்ஸ் அப்பில் அதிக நேரத்தை செலவிடுவது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை திருமணம் செய்ய மணமகன் மறுத்துவிட்டார். அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டோம்,' என தெரிவித்தனர்.

அதிர்ந்து போன மணமகளின் தந்தை மணமகன் வீட்டார் மீது போலீசில் புகார் அளித்தார். அதில் மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவளிக்கிறார் என்பதெல்லாம் சும்மா! மணமகன் வீட்டார் அதிகப்படியாகக் கேட்ட 65 லட்ச ரூபாய் வரதட்சணையை தரவில்லை என்பதே திருமணம் நிறுத்தப்பட்டதின் உண்மையான காரணம் என்று தெரிவித்திருந்தார்.

பகீபுராவைச் சேர்ந்த மணமகனின் தந்தை ஹுமார் ஹைதர், ''ஆம் நாங்கள் தான் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினோம். மணப்பெண் எந்நேரமும் வாட்ஸ் ஆப்பில் மூழ்கியிருக்கிறார். திருமணம் நெருங்கும் வேளையில் கூட அவர் மணமகனின் பெற்றோரான எங்களுக்கு வாட்ஸ் அப் செய்திகளை அனுப்பும் அளவுக்கு அதில் அடிமையாகிக் கிடக்கிறார். இந்தப் பழக்கம் எங்கள் குடும்பத்துக்கு ஒத்துவராது. எனவே அந்த மணப்பெண் வேண்டாம்,'' என போலீசாரிடம் தெரிவித்தார்.

திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதன் உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024