Sunday, September 9, 2018

'யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாத எம்.பில்., படிப்பு ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டது சரியே'

Added : செப் 09, 2018 03:19

சென்னை:'பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., ஒப்புதல் வழங்காத படிப்பை, நிகர்நிலை பல்கலையில் படித்தவர்கள், ஊக்க ஊதியம் பெற உரிமையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, சிவன் தாக்கல் செய்த மனு:பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்; ௨௦௦௯ல், சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலையில், எம்.பில்., பட்டம் பெற்றேன். அதன் அடிப்படையில், எனக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. 

ஊக்க ஊதியம்

பல்கலை மானிய குழு சட்டப்படி, இந்த, எம்.பில்., பட்டம் செல்லாது என்பதால், ஊக்க ஊதியம் வழங்க, தணிக்கை அதிகாரி ஆட்சேபனை தெரிவித்தார்.இதையடுத்து, ஊக்க ஊதியத்தை ரத்து செய்து, கோவையில் உள்ள தணிக்கை அதிகாரி உத்தரவிட்டார். அவரின் உத்தரவை ரத்து செய்து, தொடர்ந்து ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இவரைப் போல, மேலும், ௧௨ பேரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர், கே.கார்த்திகேயன், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகினர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஆசிரியர்கள், உயர் கல்வி பெறுவதன் வாயிலாக, மாணவர்கள் பயன் அடைய வேண்டும். அந்த நோக்கத்துக்காக தான், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர்கள் பெறும் பட்டங்கள், செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.திறந்தவெளி பல்கலைகள், அங்கீகாரமில்லாத பல்கலைகளில் பெறும் பட்டங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத படிப்புகளை, ஊக்க ஊதியம் பெற, பரிசீலிக்க முடியாது. சட்டப்படியாக வழங்கப்படும் படிப்புகளுக்கு மட்டுமே, ஊக்க ஊதியம் வழங்க முடியும்.

எனவே, யு.ஜி.சி., ஒப்புதல் அளிக்கும் பட்டங்கள் மட்டுமே, வேலை வாய்ப்புக்கும், அரசு சலுகைகள் பெறுவதற்கும், செல்லத்தக்கதாக கருத முடியும். மனுதாரர்கள் பெற்ற, எம்.பில்., பட்டங்கள், சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.

நடவடிக்கை

ஏனென்றால், தொலைதுார கல்வி வழியாக வகுப்புகள் நடத்த, விநாயகா மிஷன் பல்கலைக்கு, அனுமதி வழங்கப்படவில்லை. யு.ஜி.சி.,யின் சுற்றறிக்கையை மீறி, வகுப்புகளை நடத்துபவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.நிகர்நிலை அந்தஸ்தை ரத்து செய்யவும், யு.ஜி.சி.,க்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அபூர்வமாக தான் இத்தகைய நடவடிக்கைகளை, யு.ஜி.சி., எடுக்கிறது.

பல்கலைகளின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களின் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை, யு.ஜி.சி., உறுதி செய்ய வேண்டும். யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாத பாடங்கள் பற்றி, மாணவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.படிப்பை முடித்த பின் தான், அவர்களுக்கு, அந்த விபரம் தெரிய வரும். அதனால், அனுமதி இல்லாத வகுப்புகளை நடத்துபவர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுக்கும் கடமை, யு.ஜி.சி.,க்கு உள்ளது.

எனவே, மனுதாரர்கள் பெற்ற, எம்.பில்., பட்டத்துக்கு, ஊக்க ஊதியம் பெற உரிமை இல்லை. அவர்கள் பெற்ற ஊக்க ஊதியத்தை வசூலிப்பது குறித்து, ௧௨ வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை, அரசு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...