Monday, September 10, 2018


ஆளுநரே! அறக்கடமையாற்ற முன்வருக!

By பழ.நெடுமாறன் | Published on : 10th September 2018 02:54 AM |

இருண்ட சிறைக் குகையில் 27 ஆண்டு காலத்திற்குப் பிறகு மின்னல் கீற்றுப் போல ஒளி பரவத் தொடங்கியுள்ளது. 6-9-2018 அன்று உச்சநீதிமன்றம் வரலாற்று முதன்மை வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது. "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றுள்ள 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு அளிக்கும் பரிந்துரையை ஆளுநர் ஏற்று முடிவெடுக்கலாம்' எனக் கூறியுள்ளது.

1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சி.பி.ஐ.-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு 26 பேரைக் கைது செய்தது. இதில் 13 பேர் தமிழ் நாட்டுத் தமிழர்கள். 13 பேர் ஈழத் தமிழர்கள் என்பது தற்செயலானதன்று. புலன் விசாரணையும் நீதிமன்ற விசாரணையும் 7 ஆண்டு காலம் நடைபெற்று 1998-ஆம் ஆண்டு ஜனவரியில் 26 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டபோது உலகமே அதிர்ந்தது. ஒரு கொலை வழக்கில் 5 பெண்கள் உட்பட 26 பேருக்கு ஒட்டுமொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது உலக நீதிமன்ற வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.
உலக மனித உரிமை அமைப்புகளில் முதன்மையான சர்வதேச மன்னிப்பு சபை இத்தீர்ப்பை "நீதித்துறை படுகொலை' எனக் கூறியது. இதை ஒட்டி இந்தியாவெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. 26 தமிழர்கள் உயிர் காப்பு வழக்கு நிதிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மக்களிடம் நிதி திரட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தில் 27-2-1998 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக 24-8-1998 அன்று நீதியரசர்கள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, அப்துல் காதர் காத்ரி ஆகிய மூவர் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டது. 26 பேரின் சார்பில் மூத்த வழக்குரைஞர் என். நடராசன் வாதாடினார். இது குற்றவியல் சட்டப்படி தொடரப்பட வேண்டிய கொலை வழக்கே தவிர கொடிய தடா சட்டத்தின் கீழ் தொடரப்பட வேண்டிய வழக்கு அல்ல என்பது அவருடைய வாதத்தின் மையமாக அமைந்தது. 23-9-1998 அன்று தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை 15-1-1999 வரை (சுமார் 4 மாத காலம்) நடைபெற்றது. இறுதியாக 11-5-1999-இல் உச்சநீதிமன்ற ஆயம் தனது தீர்ப்பை வழங்கியது.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை உறுதி செய்யப் பெற்றது. இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 19 பேரும் விடுதலை செய்யப் பெற்றனர். இத்தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வினாவை எழுப்பியது. ராஜீவ் கொலையாளிகள் என சி.பி.ஐ. சிறப்புப் புலன் விசாரணைக் குழுவினால் குற்றம் சாட்டப்பட்டு, தடா நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 19 பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது எப்படி? குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படாமல் போயிருக்குமானால் இந்த 19 பேரும் மரண தண்டனைக்கு உள்ளாகியிருப்பார்கள். அப்படியானால் இந்த நீதி பிழைபட்ட நீதியோ என்ற அய்யப்பாடு மக்களுக்கு எழுந்தது.
இதைத் தொடர்ந்து 4 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப் பெற்றது. மாணவர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற பல தரப்பினரும் மரண தண்டனை ஒழிப்பு மாநாடுகள் நடத்தினார்கள்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் நெட்டு சீனிவாசராவ், டேவிட் அன்னுசாமி, சுரேஷ், பி. டி. ஜானகி அம்மாள், பி. சந்திரசேகர மேனன், பி. பி. உமர் கோயா, எஸ். ஆர். சந்திரன் போன்றவர்களும், முன்னாள் சி. பி. ஐ. தலைமை இயக்குநராக இருந்த வி. ஆர். லட்சுமி நாராயணன், முன்னாள் துணை வேந்தர்களான முனைவர் வசந்தி தேவி, முனைவர் கே. எம். வஹாயுதீன், முனைவர் எம். ஏ. கரீம் போன்றவர்களும் பேராசிரியர்களும் எழுத்தாளர்களும் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர்களான கே. ஜி. கண்ணபிரான், பால கோபால், ஹென்றி டிபேன், முகுந்தன் மேனன் போன்றவர்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஹிரேன் முகர்ஜி, சுனித் குமார் சாட்டர்ஜி, சிம்ரஞ்சித் சிங் மான், ஜே. ஆர். ஜேட்லி, மோகினி கிரி போன்றவர்களும் குரல் கொடுத்தனர்.

17-10-1999 அன்று அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் நால்வரின் கருணை மனுக்கள் அளிக்கப்பட்டன. அவர் அதை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார். உடனடியாக நால்வர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மூத்த வழக்குரைஞர் கே. சந்துரு (பிற்கால நீதியரசர்) ஆளுநரின் ஆணை செல்லாது என்று வாதாடினார். தமிழக அமைச்சரவையின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு அரசியல் சட்டப்படி கிடையாது என்பதுதான் அவரின் வாதமாகும்.

அரசியல் சட்ட அமைப்பின் 181-ஆம் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆளுநரின் ஆணையைப் பரிசீலனை செய்ய இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. மூத்த வழக்குரைஞர் கே. சந்துரு உச்ச நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளை எடுத்துக்காட்டி ஆளுநரின் ஆணை செல்லாததாகும் என வாதாடினார். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் கே. கோவிந்தராசன் 25-11-1999 அன்று அளித்தத் தீர்ப்பில் பின் வருமாறு குறிப்பிட்டார்:

"அரசமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவர் இந்திய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகி ஆவார். அவரிடம் ஒன்றியத்தின் நிர்வாக அதிகாரம் மேவி நிற்கும். அதைப் போன்று ஆளுநர் என்பவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். அவரிடம் அந்த மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் மேவி நிற்கும். அரசியல் சட்டத்தில் உள்ள 72-ஆம் மற்றும் 161-ஆம் பிரிவுகள் முறையே குடியரசுத் தலைவர் மற்றும் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு கருணை மனுக்களில் மன்னித்தல் முதலிய அதிகாரங்களை வழங்கியுள்ளன.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் ஆகியோர் தமது அமைச்சரவைகளின் உதவியுடனும் ஆலோசனையுடனும் மட்டுமே செயல்படுவர். அவர்கள் நேரடியாக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இயலாது. தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டினை முடிவு செய்யும் பணியானது நிர்வாகப் பணியாகும். எனவே மாநில அரசால் அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைக்கு இணங்கவே ஆளுநர் செயற்பட வேண்டும்.
ஆளுநர் ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக அரசியல் சட்ட அமைப்பினைப் பின்பற்றவில்லை; உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளையும் பின்பற்றவில்லை. எனவே அவரது ஆணை சட்டப்படியாகச் செல்லத்தக்கதல்ல. எனவே, இந்த ஆணை நீக்கப்படுகிறது. மனுதாரர்கள் மனுவின் மீது அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று அதற்குப் பிறகு புதிய ஆணையை அவர் பிறப்பிக்கலாம்' என தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஆளுநராக இருந்த பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். எனவே இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்தாலும் பயனிருக்காது என்பதை உணர்ந்து அவ்வாறு செய்யவில்லை.
இந்தத் தீர்ப்பின் நகலுடன் நால்வரின் மரண தண்டனைக்கு எதிராக 12 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை 30-11-1999 அன்று ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மாபெரும் ஊர்வலமாகச் சென்று அன்றைய முதல்வர் மு. கருணாநிதியிடம் அளித்தோம். ஆனால் நளினிக்கு மட்டும் கருணைக் காட்டப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் கருணைக் காட்டப்படவில்லை.

அதன் பிறகு குடியரசுத் தலைவருக்கு மூவர் சார்பின் கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தாமதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 18-2-2014 அன்று மூவரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, அப்போதைய ஜெயலலிதா அரசு ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது. தமிழக சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதியது. ஆனால் மத்திய அரசு இந்த விடுதலை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்டு 20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் செப்டம்பர் 6-ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்கா, கே. எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய ஆயம் "ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம். அதை ஆளுநர் பரிசீலித்து முடிவு எடுக்கலாம்' என்று கூறியது.
வாழ்வின் வசந்த காலமான இளமைப் பருவத்தை சிறையில் தொலைத்து விட்ட இந்த 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தமிழக அமைச்சரவைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1999-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அமைச்சரவைக்குள்ள இந்த அதிகாரத்தை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் 7 பேரையும் விடுதலை செய்ய உறுதி பூண்டிருந்தார். அதில் குறுக்கிட்ட தடைகள் அகற்றப்பட்டுவிட்டன. தற்போது தமிழக முதல்வர் தலைமையில் கூடிய அமைச்சரவை 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த மனித நேய நடவடிக்கையை ஏற்று மக்கள் விருப்பத்தை மதித்து தனது அறக்கடமையை ஆளுநர் நிறைவு செய்வார் என நம்புகிறோம்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...